Published : 05 Feb 2025 01:03 AM
Last Updated : 05 Feb 2025 01:03 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடக்கிறது.
திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இங்கு எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில்திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ள 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி, வி.வி.பேட் மற்றும் அழியாத மை, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. தொகுதிமுழுவதும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் 8-ம் தேதிசித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு
உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT