Published : 04 Feb 2025 12:21 PM
Last Updated : 04 Feb 2025 12:21 PM
சென்னை: “தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும். அனைவருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம். பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத்தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.O இன்று (பிப்.5) துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தமிழகத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து, தமிழக அரசு எடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக என்னுடைய தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து ஆராய, இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழகம் தான். அதுமட்டுமின்றி, துறையின் பெயரையே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று மாற்றியிருக்கிறோம். இந்த வரிசையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம், ஆகிய 4 சிறப்பு இயக்கங்கள் மூலமாக இதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாகத்தான் ஆண்டுதோறும், காலநிலை உச்சி மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு காலநிலை மாற்ற உச்சி மாநாடுகளை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்கிற வகையில், நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான விவாதங்களை முன்னெடுக்கிற தளமாக இந்த மாநாட்டை அரசு நடத்தி வருகிறது.
உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட வெள்ளம். சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ. வெப்பமண்டல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்புகள், ஆகியவற்றை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
தமிழகத்திலும் திருவண்ணாமலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இவையெல்லாம் வேறுவேறு நாடுகளில், வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களாக இருந்தாலும், இவை எல்லாத்துக்கும் ஒரே காரணமாக காலநிலை மாற்றத்தைத்தான் கூற முடியும். இதை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு முதல்தேவை பிரச்சினையின் தீவிரத்தை உணர வேண்டும். காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டுமெனில், அனைத்து தரப்பு மக்களும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? அதற்கு ஏற்றபடி எப்படி நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்? விழிப்புபணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இது நடந்தால், நமது சமூகம் காலநிலை கல்விப் பெற்ற சமூகமாக இருக்கும். பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்கான மீள்தன்மை இருக்கும். காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலமாக புகட்ட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்காலத்துக்கான கனவுகள் அனைத்துக்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான் தமிழக அரசு காலநிலை கல்வி அறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிக்கவுள்ளோம். அனைவருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம். பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத்தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வேளாண் உள்ளிட்ட துறைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும். வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால், ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT