Published : 02 Feb 2025 01:29 PM
Last Updated : 02 Feb 2025 01:29 PM
சென்னை: தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “உலக ஈரநிலங்கள் நாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021-இல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் நமது திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது. வளமான நமது இயற்கை மரபைக் காக்க மேலும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராம்சர் நிலங்கள் ஏன் முக்கியம்! சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சதுப்பு நிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர்களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும்.
நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உயரும் கடல் நீரை உள்வாங்க, மாசு மற்றும் திடக் கழிவுகளைக் கட்டுப்படுத்த, கரியமில வாயு மற்றும் மீத்தேனை உறிஞ்ச, நீர் மகரந்தச் சேர்க்கை நடைபெற, மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்த, மண் அரிப்பைத் தடுக்க, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்தைத் திடப்படுத்தி வளப்படுத்த, புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்த, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க சதுப்புநிலங்களின் இருப்பு மிக முக்கியமானது.
இத்தகைய சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களால் பொருளாதாரம் உயர்ந்து மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அந்தவகையில் சதுப்பு நிலங்களை நாட்டின் ‘மூலதனம்’ என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டில் பெருநகரத்தில் உள்ள ஒரே சதுப்புநிலம் என்ற பெருமையைக் கொண்ட சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 1960-களில் சுமார் 6000 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது. தற்போது அது 700 ஹெக்டருக்கும் குறைவான நிலப்பரப்பையே கொண்டுள்ளது. இதிலும்கூட, குப்பையைக் கொட்டுவது, திரவக் கழிவுகளை கலப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT