Published : 29 Jan 2025 08:28 PM
Last Updated : 29 Jan 2025 08:28 PM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யயை விசிக முன்னாள் நிர்வாகியும், ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனத்தை நடத்துபவருமான ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசினார். இதையடுத்து, தவெகவுடன் அவர் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரையும், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தையும் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது ஆதவ் அர்ஜுனாவின் தனியார் நிறுவனத்துடன் தவெக ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அவருக்கு தவெகவில் பதவி வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதன் மூலம் தவெகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாதான் முடிவு செய்வார் எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி முன்னெடுக்கப்படும் நகர்வுகள், பூத் கமிட்டி அமைத்தல் போன்ற களப் பணிகளை ஆதவ் அர்ஜுனா தான் மேற்கொள்ள இருப்பதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைவது குறித்தும், அவருக்கு வழங்கப்படும் பதவி குறித்தும் அதிகாரபூர்வமான அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வரும் பிப்ரவரி 2-ம் தேதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னையில் விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, விஜய்க்கு ஆதரவாக பேசியதுடன், திமுகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைத்ததால் விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
பின்னர் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இதற்கிடையே தவெகவின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் ஜான் ஆரோக்கியசாமி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தவெக குறித்து பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 2 சதவீதம் வாக்குகள் கூட தவெக பெறாது என்று அவர் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஜான் ஆரோக்கியசாமியை நீக்கிவிட்டு, ஆதவ் அர்ஜுனாவை தவெகவின் அரசியல் ஆலோசகராக நியமிப்பதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாகவே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT