Last Updated : 29 Jan, 2025 08:03 PM

 

Published : 29 Jan 2025 08:03 PM
Last Updated : 29 Jan 2025 08:03 PM

டங்ஸ்டன் சுரங்க ரத்துக்காக கிஷன் ரெட்டி, அண்ணாமலைக்கு பாராட்டு விழா - அ.வள்ளாலப்பட்டியில் ஏற்பாடு

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்துக்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அ.வள்ளாலப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மக்கள் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது அ.வெள்ளாலப்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் சுரங்க திட்டம் செயல்படுத்தப்படாது என உறுதியளித்தார்.

இதையடுத்து மேலூர் பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் அண்ணாமலை தலைமையில் டெல்லிக்கு சென்று மத்திய கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக் கோரி நேரில் வலியுறுத்தினர். அப்போது டங்ஸ்டன் திட்டம் வராது என மத்திய அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது. இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது. இதை மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், நடனம் ஆடியும் வரவேற்றனர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சித் தலைவர்களை ஊருக்கே அழைத்து வந்து நன்றி தெரிவிப்பு விழா நடத்தப்படுகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டி, அ.வள்ளாலப்பட்டியில் பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பு விழா நடத்தப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அ.வள்ளாலப்பட்டிக்கு நேரில் வந்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதியளித்துடன் விவசாயிகள் சங்க பிரநிதிகள் குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க ஏற்பாடு செய்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், சுரங்க திட்டத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும் அ.வள்ளாலப்பட்டியில் நாளை பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பு விழா நடத்தப்படுகிறது.

இதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நாளை மதியம் 2.40 மணிக்கு விமானத்தில் மதுரை வருகின்றனர். விமான நிலையத்தில் மதுரை மாநகர், மேற்கு, கிழக்கு மாவட்ட புதிய பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சரையும், அண்ணாமலையையும் சந்தித்து பேசுகின்றனர்.

பின்னர் இருவரும் அ.வள்ளாலப்பட்டிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் பெருங்குடியில் மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையிலும், மதுரை கிழக்கு தொகுதி சார்பில் கடச்சனேந்தல், மேலூர் தொகுதி சார்பில் அழகர்கோயில் கோட்டை வாசலில் மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் அ.வள்ளாலப்பட்டி செல்கின்றனர். அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மக்களின் வரவேற்பை பெற்று பேசுகின்றனர். விழா முடிந்து அரிட்டாபட்டி வழியாக மதுரை விமான நிலையம் செல்கின்றனர்.

டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிறகு மதுரைக்கு வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவேற்று மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பாஜக கொடிகளையும் பிரமாண்ட போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x