Published : 29 Jan 2025 03:52 PM
Last Updated : 29 Jan 2025 03:52 PM

தமிழக மீனவர்களின் பிரச்சினை: பிரதமர் மோடிக்கு செல்வப் பெருந்தகை யோசனை

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: “பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயடைந்த 3 மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படை 72 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தும், 554 தமிழக மீனவர்களையும் கைது செய்தும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய பாஜக அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பலமுறை கடிதம் எழுதியும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஆனால், பாஜகவினர் கச்சத்தீவு குறித்து பேசி பிரச்சினையை திசைத்திருப்பும் முயற்சியை செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அனைத்து மீனவர்களும் நன்கு அறிவார்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து சர்வதேச கடல் எல்லை 12 கடல் மைல் தூரத்திலும், கச்சத்தீவு என்பது 14 கடல் மைல் தூரத்திலும் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழக மீனவர்களை பொறுத்தவரை இந்திய கடல் பகுதியில் மீன்வளம் இல்லாத நிலையில், இலங்கை கடல் பகுதியில் மீன்வளம் அதிகமாக இருப்பதாலும் அங்கே மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தொடர்ந்து இருந்து வருகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்த நிலையில் தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடி முறையை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இதற்கான மாற்று ஏற்பாடுகள் பேசப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 31 ஜனவரி 2014-ல் தமிழக பாஜக சார்பாக ராமேஸ்வரம், மண்டபத்தில் கடல் தாமரை மாநாடு நடைபெற்றது. இதில் அன்றைய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்று உரையாற்றும் போது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தற்போது மீனவர்கள் கைது செய்யப்படுகிற நிலை தொடராது. படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமை பெற்றுத் தரப்படும். மீனவர் துறைக்கென மத்திய அரசில் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். கச்சத்தீவையும் மீட்க நடவடிக்கை எடுக்கபப்டும். அதன்மூலம், தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜோ, பிரதமர் மோடியோ தொடர்ந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பது தான் தமிழக மீனவர்களின் கேள்வியாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு 42 கடிதங்கள் எழுதியும் மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை என்று அன்று குற்றம்சாட்டியதை எவரும் மறந்திட இயலாது.

அதேபோல, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பல கடிதங்களை பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கிறார். ஆனால், இப்பிரச்சினையை தீர்க்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுஷ்மா சுவராஜ் கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழக மீனவர்கள், நீண்ட நெடுங்காலமாக, பாரம்பரியமாக இந்திய - இலங்கை கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற தொழிலை மேற்கொண்டு வந்தனர்.

இந்திய - இலங்கை அரசுகள் மேற்கொண்ட 1974 - 1976 ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் சர்வதேச கடல் எல்லை வகுக்கப்பட்டது. சர்வதேச கடல் எல்லை என்பது பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த மீனவர்களுக்கு தடையாக இருக்க முடியாது. சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடிக்க வருபவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், இலங்கை கடல் பகுதியில் காலம் காலமாக பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த அனுபவ உரிமையை இலங்கை அரசு மறுக்க முடியாது.

இந்திய அரசு, இலங்கைக்கு 4 பில்லியன் டாலர் அதாவது, ரூபாய் 35,000 கோடி அளவுக்கு நிதியுதவி செய்ததோடு, கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றது. இந்தப்பகுதியில் மிகப்பெரிய வல்லரசாக இருக்கிற இந்தியாவின் பிரதமரான மோடி, சின்னஞ்சிறிய நாடான இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x