Published : 29 Jan 2025 01:18 AM
Last Updated : 29 Jan 2025 01:18 AM
உத்தரப்பிரதேசத்தில் இருந்து துரை விஜயராஜ் உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக் கானோர் திரளும் கும்ப மேளாவில் பாதுகாப்பு பணியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி முத்திரை பதித்து, தனி ஒருவனாக அசத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்.கொளஞ்சி. 2008-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர், உத்தரப்பிரதேச காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது, அம்மாநிலத்தில் பிரயாக்ராஜ் காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
தற்போது, பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருவதால், கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் மக்கள் கூடுவதால் பாதுகாப்பையும், போக்குவரத்தையும் திறம்பட கையாளுவதற்கு ஐபிஎஸ் அதிகாரி என்.கொளஞ்சி முக்கிய தூணாக இருந்து வருகிறார். மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரயாக்ராஜ் வந்து மொழி தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்.
அந்தவகையில், பிரயாக்ராஜில் தனி ஒருவனாக அசத்தி வரும் ஐபிஎஸ் அதிகாரி கொளஞ்சி, கும்பமேளா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் சாலை மார்க்கமாக மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு மக்கள் வருவதற்கு, பனாரஸ், மத்தியப்பிரதேசம், மிர்சாபூர், லக்னோ, கான்பூர், அயோத்தி உள்பட 7 வழித்தடங்கள் உள்ளன.
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் மத்தியப்பிரதேசம் வழியாகவே வருகின்றனர். இந்த இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க அதிகளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் கும்பமேளா நடைபெறும் பகுதி வரை வந்து செல்வதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, கும்பமேளா நடைபெறும் இடத்தில் இருந்து 7 கி.மீ.க்கு வெளியே வாகனங்கள் நிறுத்துமிடம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு, நதிக்கரையின் 25 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு, நதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் மக்கள் செல்லாமல், இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமரின் பாதுகாப்பு பிரிவான எஸ்பிஜி-ஐ தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் மற்றும் தேசிய, மாநில பேரிடர் குழுவும் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், 60 ஆயிரம் பேர் பிரயாக்ராஜில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 2 ஷிப்டுகளாக சுழற்சிமுறையில் காவலர்கள் பணிபுரிகின்றனர். முக்கிய நாட்களில் மட்டும் 24 மணி நேரமும் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
தினமும் எதிர்பார்த்ததைவிட 20 சதவீதம் அதிகமானோர் பிரயாக்ராஜ் வருவதால், ஒவ்வொரு நாளும் எங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கிறது. பிப்.12-ம் தேதிக்குப் பிறகு பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- உத்தரப்பிரதேசத்தில் இருந்து துரை விஜயராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT