Last Updated : 29 Jan, 2025 09:41 AM

1  

Published : 29 Jan 2025 09:41 AM
Last Updated : 29 Jan 2025 09:41 AM

வலுக்கும் மோதல்... உடைகிறதா புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்டணி?

இம்முறை புதுச்சேரியில் காங்கிரஸ் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளுக்குமான உரசலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி போட்டி​யிட்டது.

30 தொகுதி​களிலும் போட்டி​யிட்ட இந்தக் கூட்ட​ணியால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. திமுக 6 இடங்களை பிடித்த நிலையில் திமுக-வை விட கூடுதலான இடங்களில் போட்டி​யிட்ட காங்கிரஸ் வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றது. இதனால், அங்கீகரிக்​கப்பட்ட எதிர்க்​கட்​சி​யானது திமுக.

ஆளும் கட்சியாக இருந்த தங்களுக்கு எதிர்க்​கட்சி அந்தஸ்​துகூட கிடைக்​காமல் போனதில் புதுச்சேரி காங்கிரஸாருக்கு ரொம்பவே வருத்தம். அதிலும் எதிர்க்​கட்​சிக்கான இடத்தை திமுக பிடித்​ததில் கூடுதல் வருத்தம். இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தொடக்கம் முதலே முட்டல் மோதல் இருந்து வருகிறது. கூட்ட​ணிக்கு, அதிக இடங்களில் வென்ற திமுக தலைமை ஏற்பதா அதிக இடங்களில் போட்டி​யிட்ட காங்கிரஸ் தலைமை ஏற்பதா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே, என்.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ், போராட்​டங்​களையும் நடத்தியது. ஆனால், பிரதான எதிர்க்​கட்​சியான திமுக கொஞ்சம் அடக்கியே வாசித்தது. மாநில திமுக அமைப்​பாள​ரும், எதிர்க்​கட்சித் தலைவருமான சிவா, அரசை விமர்ச்​சிப்​ப​திலும் போராட்​டங்களை முன்னெடுப்​ப​திலும் மென்மையான போக்கை கடைபிடித்​தார். இது காங்கிரஸ் முகாமை கடுகடுக்க வைத்தது.

இது தொடர்பான தங்களது ஆதங்கத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி அடிக்கடி பொதுநிகழ்ச்​சிகளில் வெளிப்​படுத்​தியும் வருகிறார். சிவா குறித்தும் வெளிப்​படையான விமர்​சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். இதனால் தமிழகத்தைப் போலில்​லாமல் புதுச்​சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தாமரை இலை தண்ணீராக நிற்கிறது.

இந்நிலை​யில், சமீபத்தில், புதுச்சேரி அரசு தொழில்​நுட்ப பல்கலைக்​கழகத்தில் படிக்கும் வடமாநில மாணவி​யிடம் 4 பேர் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் அரசுக்கு எதிராக திரும்​பியது. அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பிலும் இருந்து இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல்கள் வெடித்தன. காங்கிரஸ் கட்சி​யினர் போராட்டம் நடத்தினர்.

ஆனால், திமுக தரப்பில் எந்தவித போராட்​டத்​தையும் அறிவிக்க​வில்லை சிவா. தமிழகத்தில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எதிர்க்​கட்​சிகள் அரசுக்கு எதிரான ஆயுதமாக எடுத்​துள்ளன. அதனால் வடமாநில மாணவி விவகாரத்தில் தலையிட்டால் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை நமக்கெ​திராக பாஜக கூட்டணி திருப்பும் என்பதால் சிவா நாசூக்காக தவிர்த்திருக்​கலாம் என்கிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் திமுக தலையி​டாமல் ஒதுங்​கியதை காங்கிரஸ் சீரியஸாக எடுத்துக் கொண்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய எதிர்க்​கட்சித் தலைவர் சிவா, “வடமாநில மாணவி விவகாரத்தில் காங்கிரஸ் அவர்கள் எண்ணத்தின் அடிப்​படையில் போராட்டம் செய்கின்​றனர். அதில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய​வில்லை; அவர்களின் அரசியலை செய்கின்​றனர்” என்றார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் நாராயண​சாமியோ, “மாணவி விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. பெண்ணை தொட்டாலே பாலியல் வன்கொடுமை தான். பாதிக்​கப்பட்ட மாணவி தாக்கப்​பட்​டுள்​ளார். ஆகவே, எதிர்​கட்சித் தலைவர் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து​விட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்​கும்.

புதுச்​சேரியில் புதிதாக 8 மதுபான தொழிற்​சாலைக்கு அரசு அனுமதி கொடுத்​துள்ளது. இதில், ஆளும் கட்சி, எதிர்க்​கட்சி என்ற வித்த​யாசமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்​கின்​றனர்.

நாங்கள் யாரையும் போராட்​டத்​துக்கு அழைக்க​வில்லை. நாங்கள் எங்கள் கட்சியின் வேலையைச் செய்கிறோம். அவர்கள் அவர்களது கட்சியின் வேலையைச் செய்கின்​றனர். திமுக கூட்ட​ணியில் நாங்கள் இருக்​கிறோமா இல்லையா என்பதை திமுக-​விடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

காங்கிரசுக்கும் திமுக-வுக்கும் இடையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த மனஸ்தாபங்கள் மாணவி விவகாரத்தில் பகிரங்​க​மாகவே வெடித்​திருக்​கிறது. அத்துடன், புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்ட​ணிக்கு 2026 தேர்தலில் தலை​மையேற்கப் ​போவது யார் என்ற கேள்​வியும் இப்போது மேலோங்கி நிற்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x