Published : 29 Jan 2025 06:15 AM
Last Updated : 29 Jan 2025 06:15 AM

ஆமைகள் உயிரிழக்க காரணமான மீன்பிடி கப்பல்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? - அரசு அறிக்கைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: ஆமைகள் உயிரிழக்க காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 31-ம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு , தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டதா, ஆமைகள் உயிர் இழப்பை தடுப்பதற்கு தமிழக அரசு எடு்த்த நடவடிக்கைகள் என்னவென்று தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் அளித்த பதில்: இந்த பிரச்சினை தொடர்பாக அரசு தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட அமலாக்கப்பிரிவு, தமிழநாடு கடலோர காவல்படை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் தலைமையில் சிறப்புக்குழு (Task Force) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல்சார் அமலாக்கப்பிரிவு, தமிழக கடலோர காவல்படை ஆகிய துறைகளின் அலுவலர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக் குழு கடல் பகுதிகளில் மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களின் நடமாட்டத்தில் விதிமீறல் உள்ளதா என கண்காணித்து, விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகள், வனத்துறை மற்றும் மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியில் பல்கலைக்கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆமை இறப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, "ஆமைகள் உயிரிழப்புக்கு காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய கப்பல்களை அரசு கண்டறிந்ததா, எத்தனை மீன்பிடிக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, “மீன்பிடிக்கும்போது உரிய வழிமுறைகளைப் பின்பற்றாத மீன்பிடிக் கப்பல்கள், படகுகளுக்கு டீசல் மானியம், இதர படிகள், நலத்திட்டங்கள் வழங்குவதில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றும் அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து "ஆமைகள் உயிரிழப்புக்கு காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய மீன்பிடிக் கப்பல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 31-ம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தென் மண்டல தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x