Published : 27 Jan 2025 04:14 PM
Last Updated : 27 Jan 2025 04:14 PM
கடலூர்: “பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும்” என்று சிதம்பரத்தில் நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசுகையில், “இந்த மண் சிவன் பிறந்த மண். இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் இறைவனால் இறைவழி கொண்டவர் சுவாமி சகஜானந்தா. சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் நாம் இரண்டு வெவ்வேறு விஷயத்தில் கருத்துகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் .எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்
இரண்டு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி. கால்டுவெல் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கால்டுவெல் கூறியது இந்திய கலாச்சாரத்தை நாம் முழுமையாக சீர் கெடுத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும் என்று கூறினார். அதனால் மதமாற்றம் இங்கு நடைபெற்றது.
கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்துக்கு மாற்ற முனைந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம்? அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது? என்று அதையும் நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் வந்த பிறகு பட்டியல் சமூக மக்களை, எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன் மூலம் சீர்குலைக்க தங்களது பணியை துவக்கினார்கள். அவர்கள் தெளிவான பணிகளை முன்னெடுத்து துவக்கினார்கள். எத்தனை கல்விக்கூடங்கள் இருக்கிறது. அதில் எந்தெந்த சமூகத்தினர் படிக்கிறார்கள், என்று கணக்கெடுத்தார்கள்.
மகாத்மா காந்தி, “பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன்பு அழகான மரமாக இருந்தோம், நீங்கள் வந்த பிறகுதான் கிளைகளை அழித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள் . கீழவெண்மணியில் பட்டியல் சமூகத்தினர் கொல்லப்பட்ட கிராமத்துக்கு சென்றிருந்தோம். அங்கே ஒருவருக்கு கூட சரியான வீடு இல்லை. அதனால் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறோம். இங்குள்ள மக்கள் அடித்தட்டு மக்கள் வறுமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்
கிராம அளவில் சென்று என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொண்டு நந்தனார் கல்வி கழகத்தை துவங்கி இந்த சமூகத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்வி மூலம் சமுதாயத்தை சீரமைக்க முன்னெடுத்தவர் சுவாமி சகஜானந்தா. சுதந்திரத்துக்கு பிறகு மூன்றாவது ஒரு தூய சக்தி வந்தது. அது எங்கள் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறியது. பட்டியல் சமூகத்து ஊராட்சி தலைவருக்கு நாற்காலி கொடுப்பதில்லை. காலணி அணிந்து கொண்டு கிராமத்தில் செல்ல முடியாது, இது போன்ற சூழ்நிலை தான் இருந்தது. அது தற்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சுவாமி சகஜானந்தா இந்த மண்ணில் சமூக கல்வியாளராக இருந்திருக்கிறார். கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்ததை செயல்படுத்தி இருக்கிறார். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும். பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வரவேண்டும். சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.” என்று ஆளுநர் பேசினார். பின்னர் அவர் நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து விடுதி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக அவர் சிதம்பரம் ஓம குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT