Published : 27 Jan 2025 03:00 PM
Last Updated : 27 Jan 2025 03:00 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கிருஷ்ணன் கோயிலை வருவாய்த் துறையினர் இன்று (ஜன.27) அதிரடியாக அகற்றினர். இச்சம்பவத்துக்கு எதிராக இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் பகுதியில் 1979 -ம் ஆண்டு ருக்மணி சத்தியபாமா சமேத சந்தன கோபால கிருஷ்ண, சந்தன விநாயகர் கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத சந்தன கோபால கிருஷ்ண சந்தன விநாயகர் கோயிலை அகற்ற வருவாய் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த நவம்பரில் திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை அகற்ற சென்றனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் சுற்றுச்சுவரை இடித்த நிலையில், கோயிலை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர் வருவாய்த் துறையினர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் தரப்பில், தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு நிலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சந்தன கோபால கிருஷ்ணன் கோயிலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, புல்லரம்பாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்த கிருஷ்ணன் கோயிலை அகற்ற முடிவு செய்த வருவாய்த் துறையினர் நேற்று இரவு போலீஸார் பாதுகாப்புடன் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி மற்றும் விநாயகர் சிலைகளை அகற்றி, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் போலீஸாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான வருவாய்த் துறையினர் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன், கோயிலை சுற்றி தடுப்புகளை வைத்து 3 பொக்லைன்கள் மூலம் கோயிலை அதிரடியாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த இருவர் திடீரென தங்களது உடல்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீஸார் அவர்களை தடுத்தனர். தொடர்ந்து, தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அவர்களை புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT