Published : 27 Jan 2025 08:44 AM
Last Updated : 27 Jan 2025 08:44 AM

“பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்” - ஈரோட்டில் சீமான் வேண்டுகோள்

ஈரோடு: பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, காளைமாடு சிலை அருகே நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் தனித்து நின்று துணிந்து போட்டியிடும் இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டுமே. தர்மம் வெல்லும் என்பது உண்மையானால் ஒரு நாள் நாங்கள் வெல்வோம். நாம் தமிழர் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால், அவர் உங்களின் குரலாக சட்டப்பேரவையில் ஒலிப்பார்.

இதுவரை யார், யாரையோ நம்பினீர்கள். இந்த ஒரு முறை நாம் தமிழரை நம்பி வாக்களியுங்கள். இந்த வெற்றியின் மூலம் நீங்கள் படைக்கும் வரலாற்றை வருங்காலம் பேசும். பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்துங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நல்ல மாற்றத்தை, மாற்று அரசியலுக்கு வாய்ப்பு கொடுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

சீமான் மீது வழக்குகள் பதிவு: ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன் தினம், காளை மாட்டு சிலை, மரப்பாலம், கச்சேரி வீதி ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

காளைமாட்டு சிலை பகுதியில், நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய அனுமதி இல்லாமல் கட்சிக் கொடிகள், பேனர்கள், ஒலிபெருக்கியை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுபோல, மரப்பாலம் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 8 பேர் மீது அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோல, கச்சேரி வீதியில் உரிய அனுமதி பெறாமல் தெருமுனைக் கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 6 பேர் மீது, அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x