Published : 27 Jan 2025 06:54 AM
Last Updated : 27 Jan 2025 06:54 AM
சென்னை: வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், வட்டார தொழில்நுட்ப மேலாளர்களும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களும் கடந்த 2012-ம் ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் அவர்களுக்கு முறையே ரூ.20,000, ரூ.8,500 ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்பின் 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரே ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு அவர்களின் ஊதியம் முறையே ரூ.25,000, ரூ.15,0000 ஆக உயர்த்தப்பட்டதை தவிர அவர்களுக்கான எந்த உரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதே பணியை செய்பவர்களுக்கு அசாம் மாநிலத்தில் முறையே ரூ.64,927, ரூ.37,821 ஊதியமாக வழங்கப்படும் நிலையில், அதில் பாதி கூட தமிழகத்தில் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவர்களை இன்னொரு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர். இந்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். கைக்குழந்தைகளுடன், கருவுற்ற நிலையிலும் அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணியாற்ற அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்குவதற்குகூட தமிழக அரசு மறுப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்கள் பணிக்கான ஊதியத்தில் பெரும்பகுதியை மத்திய அரசே வழங்குகிறது. அவர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கும் மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஆனால், அதை பெற்றுக் கொள்ளும் தமிழக அரசு, தொழில்நுட்ப மேலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அதை செயல்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. பணி நிலைப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மகப்பேறு காலங்களில் விடுப்புடன் கூடிய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப மேலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு மறுத்துவருகிறது. இது மனிதநேயமற்ற செயலாகும். இது தான் திமுக அரசின் சமூக நீதியா?
வேளாண் துறை தொழில்நுட்ப மேலாளர்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சென்று பண்ணியாற்றும் தொழில்நுட்ப மேலாளர்களை, குறிப்பாக பெண்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ேபணியிட மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT