Published : 27 Jan 2025 05:52 AM
Last Updated : 27 Jan 2025 05:52 AM

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் ஊழியர்கள் கைது

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பாரிமுனையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 1,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் சுயஉரிமை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாரிமுனை குறளகம் முன்பாக நேற்று காலை 1,000-க்கும் மேற்பட்டோர் கூடினர்.

பணி நிரந்தரம், அரசுப் பணியாளருக்கு இணையான ஊதியம், பணி பாதுகாப்பு, பணி நிரவல் செய்ய வேண்டும்; 10 ஆண்டுகள் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார், அனைவரையும் கைது செய்து, வாகனங்களில் ஏற்றி தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்திருந்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் குறித்து டாஸ்மாக் தொழிங்சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக ஒப்பந்த முறையில் 36 ஆயிரம் பணியாளர்கள் 2003-ம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்டனர். 480 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க சட்டங்கள் இருந்தாலும் இதுவரை பின்பற்றவில்லை.

டாஸ்மாக் மதுபான விற்பனை தற்போது ரூ.45 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்காக, 10 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், எங்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியமோ, பணி நிரந்தரமோ , பணி விதிகளோ வழங்காமல் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

எனவே, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முயன்றோம். எங்களுக்கு அனுமதி மறுத்து, போலீஸார் கைது செய்து உள்ளனர். மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வர முயன்றவர்களையும் போலீஸார் தடுத்து உள்ளனர்.

தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஐடியு சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x