Published : 27 Jan 2025 01:54 AM
Last Updated : 27 Jan 2025 01:54 AM

மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

கி.மகாராஜன் / என்.சன்னாசி

மதுரை: மக்களின் போராட்டம், பேரவை தீர்மானத்துக்குப் பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மக்கள் போராடினர். மேலும், திட்டத்தைக் கைவிடக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, முதல்வரை சந்தித்த டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்குமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர்.

இதை ஏற்று நேற்று மாலை மதுரை வந்த முதல்வர், அரிட்டாபட்டி, அ.வள்ளாலபட்டி கிராமங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது: டங்ஸ்டன் திட்டப் போராட்டத்தில் 3 மாதங்களில் வெற்றி கிடைத்துள்ளது. மக்களும், தமிழக அரசும் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதினேன். அதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்கப் பார்க்கின்றனர். இது தொடர்பாக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிலர் குறுக்குச்சால் ஓட்ட நினைத்தனர். நான் இதை அரசியல் பிரச்சினையாகக் கருதவில்லை. நான் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று உறுதிபடத் தெரிவத்தேன்.

சட்டப்பேரவைத் தீர்மானம், மக்களின் போராட்டம் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், மக்களுக்குத்தான் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுதான் உண்மை. நாங்கள் எப்போதும் மக்களுக்குத் துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன்.

ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரப்போகிறது. மக்கள் என்ன முடிவோடு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களுக்காக நாங்களும், எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் ஒருவனாக ஆதரவு தாருங்கள். கருணாநிதி வழியில் ஆட்சிபுரிந்து வருகிறேன். இந்த ஆட்சி உங்களுக்கானது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில், “டங்ஸ் டன் திட்டத்தை எதிர்த்துப் போராட் டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கு கள் அனைத்தும் திரும்பப் பெறப் படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். அதன்படி, போராட்டத் தில் ஈடுபட்ட 11,608 பேர் மீது காவல் நிலையங்களில் 3 பிரிவு களில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன" என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x