Published : 26 Jan 2025 07:51 PM
Last Updated : 26 Jan 2025 07:51 PM
மதுரை: “மக்களின் போராட்டம் மற்றும் பேரவை தீர்மானத்துக்கு பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது” என அ.வெள்ளாலப்பட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரை - மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவதாக மக்கள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மேலூர் பகுதி விவசாய சங்கக் பிரதிநிதிகள், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. திட்டம் ரத்தானதை மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னைக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, மேலூர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்துவதாகவும், அதில் பங்கேற்க வேண்டும் என்றும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வந்தார். அரிட்டாபட்டி, அ.வள்ளாலப்பட்டியில் நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. மதுரையிலிருந்து இக்கிராமங்களுக்கு சென்ற முதல்வரை வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
அ.வள்ளாலப்பட்டியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “மத்திய பாஜக அரசு டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவர முயன்றது. மத்திய அரசு என்னனென்ன கொடுமைகள், அக்கிரமங்கள், மக்கள் விரோத செயல்களை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே டில்லியில் விவசாயிகள் குளிரிலும், வெயிலிலும் 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்தனர்.
டங்ஸ்டன் திட்டப் போராட்டத்தில் 3 மாதத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இது முக்கியமானது. மத்திய அரசு பணிந்து போய் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதற்கு மக்களான நீங்களும், தமிழக அரசு கொடுத்த கடுமையான எதிர்ப்பும் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது மாபெரும் வெற்றியாகும்.
டங்ஸ்டன் திட்டத்துக்கு மூல காரணம், மாநில அரசின் அனுமதியில்லாமல் முக்கிய கனிம வளங்களை மத்திய அரசு ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த சட்டம்தான். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. எதிர்கட்சியான அதிமுக எதிர்க்கவில்லை. மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பித்துரை, சட்டத்தை ஆதரித்தும், வரவேற்றும் பேசினார். இதுவே டங்ஸ்டன் திட்டத்துக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதினேன். அதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்கப் பார்க்கின்றனர். தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தது வந்தது. இதை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றனர். இந்த எதிர்ப்பை மீறி ஏலம் விட மத்திய அரசு முயன்றது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அரிட்டாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் அனுமதி தரமாட்டார், நிச்சயமாக தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என உறுதியாக தெரிவித்தார்.
அடுத்து மேலூரில் வணிகர்கள், மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது அங்கும் அமைச்சர் பி.மூர்த்தி நேரில் வந்து, டங்ஸ்டன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தெளிவாக கூறியுள்ளார். முதல்வரின் உணர்வுகளை மக்களிடம் அமைச்சர் மூர்த்தி எடுத்துக் கூறியுள்ளார்.
அன்று மதியமே திட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினேன். அன்று மாலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்னிலையில் வணிகர் சங்கம், மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்திலும் தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் மூர்த்தி விளக்கினார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிலர் குறுக்குசால் ஓட்ட் நினைத்தார்கள். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இதை அரசியல் பிரச்சினையாக கருதவில்லை. நான் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது, தமிழக அரசு அனுமதி அளித்தால் தான் திட்டம் வரும். அதையும் மீறி திட்டததை கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன். இது தான் முடிவு என என அழுத்தம் திருத்தமாக கூறினேன்.
திட்டம் நிறைவேறும் சூழல் வந்தால் முதல்வராக இருக்கமாட்டேன் என ஏன் சொன்னீர்கள் என அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு பதவியை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் பிரச்சினை தான் எனக்கு பெரிது என தெளிவாக கூறினேன். சட்டப்பேரவைத் தீர்மானம், மக்களின் போராட்டம் காரணமாக திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நேரத்தில் சட்டப் பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் உங்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இது உங்களின் அரசு, உங்களில் ஒருவனாக இருந்து கடமைகளை நிறைவேற்றுவேன் என தெளிவாக கூறினேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி பதவியேற்றேன். அவர் வழியில் நின்று ஆட்சி செய்து வருகிறேன். இந்த ஆட்சி எங்களுக்கானது அல்ல. உங்களுக்கானது” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அடிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய மக்கள் எப்படிப்பட்ட அழுத்தம் கொடுத்தனர் என்பது நன்கு தெரியும். இதை உணர்ந்த உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியும் உரிய நடவடிக்கை எடுத்தது. திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பேசினர். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தற்போது நினைத்தபடி வெற்றி கிடைத்துள்ளது.
சட்டப்பேரவையில் டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஏகமனதாக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இப்போது திட்டம் ரத்தாகியுள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்க சென்னைக்கு வந்து என்னை சந்தித்தவர்கள் நன்றியும், பாராட்டு தெரிவிக்க அரிட்டாபட்டி, வள்ளாலப்பட்டிக்கு நேரில் வர வேண்டும் என அழைத்தனர். அந்த அழைப்பை ஏற்று வந்துள்ளேன்.
உள்ளபடி உங்களுக்கு தான் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுதான் உண்மை. அந்த நன்றிக்கு பாத்திரமாக இருக்கும் நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன்.
அன்பான, எழுச்சியான, புன்னகையுடன் இருக்கும் உங்கள் முகங்களை பார்க்கும் போது எனக்கு நீண்ட நேரம் பேச வேண்டும் என ஆசையாக உள்ளது. இன்னொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை வேறு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் உள்ளது. இதனால் நீண்டநேம் பேச முடியாது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.
ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரப்போகுது. அது உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் மக்கள் என்ன முடிவோடு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எது எப்படியிருந்தாலும் உங்களுக்காக நாங்கள், எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இது பெரியார் வழியில் நடக்கும் ஆட்சி. அண்ணா, கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆட்சி. உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களால் ஒருவனாக இருக்கும் ஸ்டாலின் ஆட்சி. என்றைக்கும் ஆதரவு தாருங்கள். உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- கி.மகாராஜன், என்.சன்னாசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT