Published : 26 Jan 2025 06:49 PM
Last Updated : 26 Jan 2025 06:49 PM
சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதி அளித்து, இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மேலும், இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது.
இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT