Published : 26 Jan 2025 05:58 PM
Last Updated : 26 Jan 2025 05:58 PM

“திமுகவே நாடக கம்பெனிதான்... வேங்கைவயல் திரைக்கதை, வசனம்...” - அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை

சென்னை: “திமுக என்றாலே டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்றுதான் சொல்வோம். வேங்கைவயல் நிகழ்வுக்கு தமிழக காவல் துறை எழுதியிருக்கும் திரைக்கதை வசனம், கருணாநிதி எழுதக் கூடிய வசனத்தை மிஞ்சக்கூடிய வகையில் இருக்கிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருப்பூரில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக, என்றாலே டிராமா கம்பெனி, நாடக கம்பெனி என்று தான் சொல்வோம். தற்போது வேங்கைவயல் நிகழ்வுக்கு தமிழக காவல் துறை எழுதியிருக்கும் திரைக்கதை - வசனம், கருணாநிதி எழுதக் கூடிய வசனத்தை மிஞ்சக்கூடிய வகையில் இருக்கிறது.

வேங்கைவயல் விவகாரத்தில் 900 நாட்களுக்கு பிறகு, இதை யாரும் நம்பப் போவது கிடையாது.வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளை கடந்து நின்று கொண்டு இருக்கிறோம். இத்தனை நாள்கள் இல்லாமல் இப்போது வேங்கைவயல் விவகாரத்தில் ஆடியோ, வீடியோ வெளியே வருகிறது.

காவல் துறையின் குற்றப்பத்திரிகையை திமுக அரசின் திரைக்கதை வசனமாக தான் பார்க்கிறோம். உள்ளத்தில் உங்களுக்கு பயம் இல்லை என்றால் எதற்காக சிபிஐ விசாரணை தடுக்கிறீர்கள். இன்றைக்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவு படி சிபிஐ விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உண்மையாக, வெளிப்படையாக இருக்கும் திமுக அரசாக நீங்கள் இருந்தால், ஏதற்கு சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும்.

கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை. யாரின் கண்களை துடைக்க போலிச் செயல்களில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்தியாக வேண்டும்.

ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இன்றைக்கு திமுகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால், முதல் தகுதி படிக்காமல் இருக்க வேண்டும். திமுகவில் அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் முதல் தகுதி பொய் சொல்ல வேண்டும். பெரிய அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் ஊழல் செய்ய வேண்டும். இந்த மூன்று தகுதிகளும் இருக்கக்கூடிய திமுக அமைச்சரோ, திமுகவின் எம்எல்ஏவோ, திமுகவின் மக்கள் பிரதிநிதியோ, ஆர்எஸ்எஸ் தான் காந்தியை கொன்றார்கள் என்ற பொய்யை சொல்வதில் எந்த ஒரு புது விஷயத்தையும் நான் பார்க்கவில்லை.

அவர்கள் பொய்யிலே பிறந்தவர்கள். ஊழல் செய்வதற்காக பிறந்தவர்கள். அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை. சிலருக்கு சர்ச்சைக்குரிய கருத்தை பேசிதான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் அரசியல் என்னவென்றால், மேடையில் மைக் பிடித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசினால் மீடியாவில் இரண்டு நாட்கள் பேசுவார்கள் என்று நினைக்கின்றனர். இதனால் பயன் கிடைக்க போவதில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x