Published : 26 Jan 2025 05:00 PM
Last Updated : 26 Jan 2025 05:00 PM

“இது பெரியார் மண் அல்ல; எங்களுக்கு பெரியாரே...” - சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

சீமான் | பெரியார் | கோப்புப் படம்

சென்னை: “திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். பெரியார் மண், பெரியார் மண் என்று யாரும் பேச வேண்டாம். எங்களுக்கு பெரியாரே மண்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திராவிடா உனக்கு ஒரு தலைவர் பெரியார் மட்டும்தான். ஆனால் தமிழர்கள் எங்களுக்கு எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான்.

இந்தி எதிர்ப்பு போரில் தமிழர்கள் தீக்குளித்த போது கொலைகாரர்களாக பார்த்தவர் பெரியார்தான். கடன் தொல்லையால் கீழப்பழூர் சின்னசாமி தற்கொலை செய்ததாக இழிவுபடுத்தியது பெரியார்தான். இந்திக்கு எதிராக போராடுகிற கருங்காலிகளை பெட்ரோல், டீசல் கொண்டு கொழுத்துங்க, வெட்டுங்க என்று சொன்னவர்தான் பெரியார். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார் வெரி சாரி.

பிரபாகரன் ஒரு தீவிரவாதி.. பயங்கரவாதி.. தனித் தமிழீழம் தீர்வு அல்ல என்று சொல்கிற கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கையில் தமிழினத்தை அழித்தது காங்கிரஸ், துணை நின்றது திமுக. அப்போது ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கு எந்த பதற்றமும் இல்லை.. எல்லோரும்தான் என்னை பார்த்து பதற்றம் அடைகிறார்கள்.

வீரமிக்க ஆண் மக்கள், ஆகச் சிறந்த தலைவர்கள் பெரியாரின் பிராமண எதிர்ப்பை ஏற்பதாக இருந்தால், ஏன் ஒரு பிராமண பெண்ணின் தலைமையை ஏற்றீர்கள். அம்மா, அம்மா என்று காலில் விழுந்து கும்பிட்டீர்கள்! உங்கள் பெரியார் சொன்னதை திராவிட கட்சிகள் செய்ததா?. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது, பெரியார் எதிர்த்த அந்தப் பார்ப்பணிய பெண் தான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண்தான். பெரியார் செய்த சமூக சீர்திருத்தத்தை, பெண்ணிய உரிமையை, சாதிய ஒழிப்பை, சமூக நீதியை, ஒரே ஒரு முறை மேடைபோட்டு, பட்டியலிட்டு பேசுங்கள்.

பெரியாரை ஆதரித்து பேசினேன்தான். நான் அதனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தற்போது தலை வலிக்கிறது மாத்திரை போடுகின்றேன். பெரியாரை நான் புள்ளி அளவிற்குதான் விமர்சித்து பேசியுள்ளேன். பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான்.

திமுக ஏழாவது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும் நேர்மையும் எடுத்துக்கொண்டு வலுவான கருத்து வைக்கும் போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகர்த்து, புதிய ஒரு கோட்பாட்டை கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள் ஆதரிப்பார்கள், அருவருப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக் கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத்தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும் வீரமும் தேவைப்படுகிறது. அப்படி நின்றவன்தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு.

தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடக்கிறது. விஜயை இப்போது ஏன் இழுக்கிறீர்கள்? மெயின் ரவுடிகள் மோதும் போது விஜயை ஏன் இழுக்கிறீர்கள்?. திரும்ப திரும்ப சொல்கிறேன்.. இதனை பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொன்னால் கொலை வெறியாகிவிடும். இது சேர சோழ பாண்டியர் மண்.. பூலித்தேவர் மண்.. வேலுநாச்சியார் மண்.. முத்துராமலிங்க தேவர் மண். காமராஜர் மண். இது என் மண்.. தமிழ் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்” என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x