Published : 26 Jan 2025 04:49 PM
Last Updated : 26 Jan 2025 04:49 PM
புதுச்சேரி: புதுச்சேரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 4,750 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு திட்ட வரையறை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார். மேலும், காரைக்கால் துறைமுகம் ஸ்மார்ட் மீன்பிடி துறைமுகமாகிறது என்றும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனின் குடியரசு தினவிழா உரையில் கூறியிருப்பதாவது: 'பெஞ்சல்' புயலின்போது, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெருமழையை நாம் சந்தித்து இருக்கிறோம். இது நமக்கு சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. நமது உள்கட்டமைப்பில் எங்கே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருக்கிறது. அதனை நோக்கி புதுச்சேரி அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
வேளாண்மைத் தொழிலே, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 45% மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, விவசாயத் துறையின் வளர்ச்சிக்காகவும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் இந்த அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
விவசாய நிலப்பரப்பு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது . ஆகவே, நம்முடைய விவசாயத் துறையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இளைய தலைமுறையினரின் கவனத்தை நாம் விவசாயத்தை நோக்கித் திருப்ப வேண்டும். உயர் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம். தோட்டக்கலை ஆகியவற்றின் மூலமாக விவசாய உற்பத்தித் திறனை நாம் அதிகரிக்க வேண்டும். தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுக விரிவாக்கம், பெரிய காலாப்பட்டு மற்றும் நல்லவாடு பகுதியில் மீன் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் மத்திய அரசின் நிதி உதவியோடு ரூ.92.47 கோடி செலவில் நடைப்பெற்று வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 14 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் ஏற்படுத்த ரூ.4.34 கோடிக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், காரைக்கால் துறைமுகத்தை ரூ. 119.42 கோடி செலவில் பொலிவுறு மீன்பிடித் துறைமுகமாக மேம்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டரீதியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்தவும் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தவும் மத்திய அரசுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுச்சேரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.4,750 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு திட்ட வரையறை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு மேற்பரப்பு நீர் ஆதாரங்களில் இருந்து தூய்மையான குடிநீர் வழங்குவது, தற்போதைய குடிநீர் விநியோகத்தை விரிவுப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் மேம்பாலங்கள் மூலமாக இணைக்கும் இணைப்புச் குறைக்க தேசிய நெடுங்சாலைகளை சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.60 கோடி செலவில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் மத்திய ஊரக வளர்ச்சித் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. 'பசுமைப் புதுச்சேரி இயக்கம் 2024' மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தின் பசுமைப் பரப்பை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், உலக சுற்றுக்சூழல் தினத்தன்று பாரதப் பிரதமரால் தொடங்கப்பட்ட 'தாயின் பெயரில் ஒரு மரம்' தேசிய இயக்கத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். பங்களிப்போடும் வளமான புதுச்சேரியை, வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT