Published : 26 Jan 2025 04:49 PM
Last Updated : 26 Jan 2025 04:49 PM

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க கோரி டிராக்டர் பேரணி @ புதுச்சேரி

புதுச்சேரி: அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை குறைக்கவும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக ஆக்கவும் வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக புதுவையில் டிராக்டர், மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

கடலூர் சாலை தியாகிகள் சிலை சதுக்கத்தில் இருந்து வாகன பேரணி கிளம்பியது. பேரணியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான வைத்திலிங்கம் தொடக்கி வைத்தார். பேரணிக்கு புதுச்சேரி விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி, காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் அக்ரி வி. முருகன், செல்வ மணிகண்டன், திராவிட முன்னேற்றக் கழக விவசாய அணி தலைவர் குலசேகரன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் சங்கர், அகில இந்திய விவசாயிகள் மகா சபா தலைவர் புருஷோத்தமன், மக்கள் அதிகாரம் விவசாய அணி தலைவர் சாந்தகுமார், மதிமுக விவசாய அணி பிரிவு தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்கள்.

பேரணி மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக சென்று சுதேசி மில் அருகில் நிறைவடைந்தது. போராட்டம் தொடர்பாக பேசியோர், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை குறைக்கவேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நகர பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டும், திருத்தப்பட்ட நான்கு தொழிலாளர் நலச்சட்டங்களை திரும்ப பெறவேண்டும் உட்பட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. பேரணியில் 50 டிராக்டர்கள், 200 மோட்டார்சைக்கிள்கள் அணிவகுத்தன" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x