Published : 26 Jan 2025 03:15 PM
Last Updated : 26 Jan 2025 03:15 PM

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வேங்கை வயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த விசாரணையில் இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படாத நிலை இருந்தது.

இந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலானாய்வுத் துறைக்கு(சிபிஐ) மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசரை நியமித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், இது குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் எவ்விதமான அறிக்கையையும் சமர்ப்பிக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில், அவசர அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது, வழக்கு சரியான திசையில் செல்லவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்றால், சிபிசிஐடி விசாரணை என்பது சுதந்திரமாக நடைபெறவில்லை என்பதும், காவல் துறைக்கு ஆளும் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதும், உண்மையானக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. திமுக அரசின் மெத்தனப் போக்கு பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சூழ்நிலையில், மேற்படி பிரச்சினை தொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

எனவே, பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க ஏதுவாக, மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x