Published : 26 Jan 2025 12:51 PM
Last Updated : 26 Jan 2025 12:51 PM
நெல்லை: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாயின் உடலை அவரது மனநலம் பாதித்த மகன் 15 கி.மீ. தூரத்துக்கு சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக நோயாளி வெளியேற்றப்பட்டு உயிரிழந்ததாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வெளியானதை அடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள விளக்கம்:
நாங்குநேரி வட்டம் மீனவன்குளம் கிராமத்தை சேர்ந்த பாலன் மற்றும் சவரிமுத்து ஆகியோரின் தாயார் சிவகாமி என்பவர் வீட்டில் மயக்கமடைந்ததால் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடந்த 22-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவும் அருந்தி வந்துளார்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி காலை, பாலன் அவரது தாயாரை தன்னிச்சையாக மருத்துவர்கள் அனுமதியின்றி வீட்டுக்கு அழைத்து சென்றுளார். அவர் தனது தாயாரை அழைத்து செல்வது மருத்துவமனை சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் அருகில் உள்ள உணவகத்தில் உணவு அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் தனது தாயாரை சைக்கிளில் அமரவைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அன்று இரவு 9 மணியளவில் திருநெல்வேலி - நாகர்கோவில் சாலையில் மூன்றடைப்பு புதிய பாலம் அருகில் வரும்போது அங்கு வாகனத் தணிக்கையில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பார்த்தபோது, சிவகாமி உயிரழந்திருப்பது தெரிய வந்தது.
உடனே சிவகாமியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் (24-ம் தேதி) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிவகாமியின் உடல் அவரது மற்றொரு மகன் சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாலன் தன்னிச்சையாக தனது தாயாரை அழைத்து சென்றுள்ளார். சிவகாமி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்பது விசாரணை மூலமாகவும் சி.சி.டி.வி பதிவுகள் மூலமாகவும் தெரியவருகிறது. ஆதரவற்ற நோயாளிகள் இருந்தால் அவர்களை கவனிப்பதற்கு தன்னார்வ அமைப்புகளோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் உரிய வசதிகளின்றி யாரேனும் உயிரிழந்தால், அவர்களை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து உதவிகளும் தன்னார்வலர்கள் மூலமாகவும் மருத்துவக் கல்லூரி மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT