Published : 26 Jan 2025 12:49 PM
Last Updated : 26 Jan 2025 12:49 PM

‘டங்ஸ்டன்’ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட துடிக்கும் கட்சிகள்! - ஒரு பார்வை

மதுரை: மேலூர் அருகே ‘டங்ஸ்டன்’ சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் அந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாட அரசியல் கட்சியினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாக அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் திகழ்கின்றன. இந்த கிராமங்களில் 4,980 ஏக்கர் நிலங்களில் ‘டங்ஸ்டன்’ கனிமம் வெட்டி எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு கடந்த நவ. 7-ம் தேதி ஏலம் மூலம் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியானது.

இதற்கு இப்பகுதி மக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே பெரிய எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஜனவரி 7-ம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 15 கி.மீ நடைபயணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து முற்றுகை போராட்டம் நடத்தியது மாநில அளவில் கவனம் ஈர்த்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு நடந்த மிகப் பெரிய போராட்டமாக இது பார்க்கப்பட்டது. இதையடுத்து, பாஜக உட்பட அனைத்து கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்துசெய்ய குரல் கொடுத்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த டிச. 9-ம் தேதி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஆதரவுடன் அரசு தனி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் நான் முதல்வராக இருக்கும் வரை இந்த திட்டம் வராது. மீறி வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், போராட்ட குழுவினரை சந்தித்து, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நான் பொறுப்பு என வாக்குறுதி கொடுத்தார். மேலும் மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 8 பேரை டெல்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்திக்க வைத்தார். இந்நிலையில், பொதுமக்களின் போராட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனால் கடந்த 3 மாதமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் நாளை பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னையில் முதல்வரை சந்தித்து பாராட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதையேற்று முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மதுரை வருகிறார். அடுத்ததாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அழைத்துவந்து பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த, மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும், அண்ணாமலை இப்பிரச்சினையை கையில் எடுத்த பிறகுதான் திட்டம் ரத்தானதாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதுபோல், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார், சட்டப்பேரவையில் அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தாலேயே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமியை அரிட்டாபட்டிக்கு அழைத்து வந்து விவசாயிகள், மக்களை சந்திக்க வைக்க அதிமுகவினர் தயாராகி வருகிறார்கள். இதுபோல கம்யூனிஸ்ட் கட்சியினரும், மக்களுடன் களத்தில் நின்ற எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர்.

‘டங்ஸ்டன்’ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட தமிழக அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட போட்டியால் யாருக்கு சாதகமாக பேசுவது என அரிட்டாபட்டி கிராம மக்களும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x