Published : 26 Jan 2025 08:47 AM
Last Updated : 26 Jan 2025 08:47 AM

“சீசனுக்கு ஏற்ப இடத்தை மாற்றும் சர்க்கஸ் கூடாரம் சீமான்!” - விளாசுகிறார் திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி

திமுக-வின் மாநில மாணவரணித் தலைவர் ரா.ராஜீவ்காந்தி. நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளராக இருந்த இவர், சீமானுடன் முரண்பட்டு அக்கட்சியில் இருந்து விலகியவர். பெரியார் எதிர்ப்பு என புது அவதாரம் எடுத்துள்ள சீமான் பற்றி இந்தப் பேட்டியில் விளாசுகிறார் ராஜீவ்காந்தி.

பெரியார் எதிர்ப்பு என்ற சீமானின் புது அவதாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - சீமான் ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி. சீசனுக்குத் தகுந்த மாதிரி எந்த ஊரில் சர்க்கஸ் போடலாம் என்று பார்த்து இடத்தை மாற்று​வார். நாம் தமிழர் கட்சியை அவர் தொடங்​கியபோது ஈழத்தில் பேரழிவு. அதனால் மக்கள் கொந்​தளித்​தனர். பெரியாரின் பெருந் தொண்​டர்கள் என்று தங்களை அடையாளப்​படுத்திக் கொண்​ட​வர்​களும் திமுக-வும் மதிமுக-வும் என எண்ணிலடங்கா தலைவர்கள் ஒருபோதும் ஈழத்தை எதிர்க்க​வில்லை.

அதனால்தான் தமிழகத்தில் ஈழம் என்கிற ஸ்பேஸ் வந்தது. அந்த அரசியல் விதையைப் போட்டது பெரியார்​வா​திகள். அதன்மூலம் மேடை ஏறியவர்தான் சீமான். ஈழ அரசியல் பேசி தனது சர்க்கஸ் கூடாரத்தை வளர்த்துக் கொண்டவர் இன்றைக்கு நேர் எதிராக பெரியாரையும் பிரபாகரனையும் நிறுத்துவது அபத்தம். அவருக்கு முகவரி கொடுத்​தவர்கள் எண்ணிலடங்கா பெரியார்​வா​திகள் என்பதை அவரால் மறுக்க முடியாது.

பெரியாரை விமர்​சித்தால் தனக்கு வாக்குகள் கிடைக்காது என்று சீமானுக்குத் தெரியும். அவர் ஏதோ கத்து​கிறார் என்றுதான் மக்கள் பார்க்​கிறார்கள். கத்துவதை ரசிக்​கலாம், ஓட்டுப் போட முடியாது என்ற மனநிலைதான் மக்களிடம் உள்ளது. எங்கு போனால் பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைத்து மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக பேசிய அவதூறை இப்போது தன் கையில் எடுத்​துள்ளார் சீமான். மேடையில் பேசும்​போது, படம் எடுத்து பிழைப்​ப​தற்காக சென்னை வந்ததாகச் சொல்​வார்.

இப்போது, எடிட் செய்யப்பட்ட படத்தை வைத்து பிழைத்துக் கொண்​டிருக்​கிறார். முன்பு அவரது சர்க்கஸ் கூடாரத்​திற்கு கம்யூனிஸ்ட் கட்சி, திக, திமுக, அதிமுக உட்பட எல்லா பொது மேடைகளும் தேவைப்​பட்டது. இப்போது கடைசியாக, குருமூர்த்தி ஆதரவோடு ஆர்எஸ்​எஸ்​-சுக்காக சர்க்கஸ் கூடாரம் போட்டுள்​ளார்​.

நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினீர்கள்? - நாம் தமிழர் என்ற அமைப்பை சீமான் தனக்கானதாக மாற்ற முற்பட்டதால், முரண்பாடு உருவானது. பெரியார் மாற்று மொழியைச் சேர்ந்தவர் என்றார். நான் பெரியார்வாதி என்பதால் அவருக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதனால் 2017-ல் நாதக-வில் இருந்து வெளியேறினேன். என்னைப் போல எண்ணிலடங்காதவர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேறினார்கள். ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர்.

பெரியார் பற்றி அவதூறு, ஆபாசம் பேசுவதால் அந்த கட்சியில் கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இப்போது கட்சியில் இருப்பவர்களை விட விலகியவர்கள் எண்ணிக்கை அதிகம். நாம் தமிழர் கட்சியைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார், பெரியாரை விமர்சிக்கவில்லை. மீடியா வெளிச்சத்துக்காக சீமான் பெரியாரை விமர்சிப்பது எத்தனை நாட்களுக்கு நிற்கும்?

கூட்டணிக் கட்சிகளின் அண்மைக்கால ‘தோழமை குட்டல்’கள் திமுக-வின் பொறுமையை சோதிக்கவில்லையா? ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அவர்கள் கேட்பது தவறா? - கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும் கொள்கைத் தெளிவு இருக்கிறது. அதனால் பிணக்கு இல்லை. ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது தேர்தல் உடன்பாடு வரும் நேரத்தில் பேசக்கூடிய விஷயம். திமுக-வின் லட்சியம் மாநில சுயாட்சி. அதுபோல கூட்டணிக் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது போன்ற லட்சியம்கூட இருக்கலாம். அதுபற்றி கருத்து தெரிவிக்கலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால், அதுபற்றி தேர்தல் நேரத்தில்தான் பேச முடியும்.

அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்துக்குப் பரிகாரம் தேடாமல் கடந்த ஆட்சியின் பொள்ளாச்சி சம்பவத்தை இழுத்துப் பேசுவதுதான் திமுக சொல்லும் அறமா? - பொது அரசியலில் தனிமனித உளவியலை ஆராய முடியாது. பொதுவெளியில் என்ன முகம் காட்டப்படுகிறதோ அதுதான் கட்சியின் முகம். தனிமனித விருப்பு, வெறுப்புகள், எண்ணங்கள், அபிலாஷைகளை ஆய்வு செய்ய முடியாது.

அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகார் கூறப்பட்டவர் திமுக-வின் அடிப்படை உறுப்பினராக இருந்தால்தான் நீக்க முடியும். அவர் அப்படி இல்லை. ஆனால், புகார் வந்தவுடன் 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டியதால் பொள்ளாச்சி சம்பவத்தை ஒப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம், சிபிஎம் மாநிலச் செயலாளராக இருந்த கே.பி. மாற்றம் - இதெல்லாம் திமுக-வின் அழுத்தத்தால் நடக்கின்றன என்ற விமர்சனம் பற்றி..? - பிரச்சினை அடிப்படையில் கே.பி-யுடன் முரண்பாடு இருந்ததே தவிர, வேறு எந்த வகையிலும் இல்லை. ஆதவ் அர்ஜூனா ஒரு விளம்பரப் பிரியர். இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவிலலை.

உண்மையைச் சொல்லுங்கள்... தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை திருப்தியாக இருக்கிறதா? - நீதிமன்றத்தின் பார்வையிலும், தரவுகள் அடிப்படையிலும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், தனிமனித பிரச்சினைகளை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மாற்றப் பார்க்கிறார்கள். பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. அதனை அதிமுக அரசு சரியாக கையாளாததால் அது பொது ஒழுங்கு பிரச்சினையாக மாறியது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் பக்கமே அரசும், திமுக-வும் நிற்கிறது; நிற்கும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இப்போது எதிர்க்கட்சிகள் போராடக் கிளம்பினாலே கைது செய்கிறதே போலீஸ்..? - காவல்துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்தினால் யாரும் கைது செய்யப்படுவதில்லை. அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதாலேயே பாமக, பாஜக, நாதக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

ஆளுநருக்கு எதிராக போராட திமுக அனுமதி கேட்டது. அனுமதி தரப்படவில்லை. இருப்பினும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தால் பொது அமைதிக்கு பங்கம் வராது என்பதால்தான் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், அனுமதி இல்லாமல் போராடியதால் அனைவர் மீதும் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை ஊரில் இருந்தாலே தமிழக அரசியல் களம் பரபரப்பாகி விடுகிறதே... எதிர்க்கட்சியாக அதிமுக தனது கடமையை செய்யத் தவறுவதால்தான் அண்ணாமலை மைலேஜ் எடுக்கிறார் என்று சொல்வதை ஏற்கிறீர்களா? - சீமான் ஆர்எஸ்எஸ்-சுக்காகவும் அண்ணாமலை பாஜக-வுக்காகவும் வேலை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே பேசுகின்றனர். எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி திமுக எதிர்ப்பைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. அரசியல் என்பது திமுக எதிர்ப்பு மட்டுமில்லை.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியைத் தரவில்லை, தூத்துக்குடி, சென்னை பெருமழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை. இதற்கெல்லாம் பழனிசாமி ஒரு கடிதமும் எழுதவில்லை; போராட்டம் நடத்தவில்லை. அதனால் சீமான், அண்ணாமலை போன்றவர்கள் பேசுவது பெரிதாக்கப்படுகிறது.

திமுக நிர்வாக மாவட்டங்கள் அதிகரிப்பு, உதயநிதியின் கரத்தை வலுப்படுத்த இளைஞரணியினருக்கு மா.செ பதவிகள் என்றெல்லாம் சொல்லப்பட்டதே என்னாயிற்று? - இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதற்காக, எங்களை வழிநடத்தும் பெரியவர்களையோ, சிந்தனையில் தெளிவான அரசியல் ஞானம் கொண்ட யாரையும் திமுக ஒருபோதும் புறக்கணிக்காது. ஏனென்றால் இளைஞர்களுக்கான வழியென்பது பெரியவர்கள் போட்டுத்தந்த பாதை தானே தவிர, வேறு எதுவும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x