Published : 26 Jan 2025 06:20 AM
Last Updated : 26 Jan 2025 06:20 AM
சென்னை: சென்னை தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 14 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் சுகாதாரத்துறையின் கீழ் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
அதில், 303 வாகனங்களில் உயிர் காக்கும் உயர் மருத்துவ வசதிகள் உள்ளன. இவைதவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 7 ஆயித்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை கட்டுப்பாட்டு அறை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளது. புதுக்கோட்டையிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தினமும் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அவசர அழைப்புகளை பேசி கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் பிரச்சினைகளுக்கு ஆளாகினர். உடனடியாக அங்கிருந்த 100-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மற்ற பகுதியில் இருந்தும் ஆம்புலன்ஸ்கள் வர வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
2 ஆண் ஊழியர்கள், 12 பெண் ஊழியர்கள் என மொத்தம் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இருந்த ஏசி-யில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
வாயு கசிவு குறித்து விசாரணை: இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், “108 அவசர கால கட்டுப்பாட்டு அறையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர அழைப்புகள் அனைத்தும், புதுக்கோட்டையில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு மாற்றப்பட்டன.
இந்த வாயு கசிவு ஏசி சாதனத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஏசி சாதனங்கள் சோதனை செய்ததில், அதிலிருந்து கசிந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து, பாதிப்புக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 பேரில் ஒருவருக்கு மட்டுமே மூச்சு திணறல் பாதிப்பு இருந்தது. மருத்துவ கண்காணிப்பில் இருந்த 10 பேர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டனர். ஒருவர் வீடு திரும்பினார். மூன்று பேர் தீவிர சிகிச்சையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT