Published : 26 Jan 2025 06:09 AM
Last Updated : 26 Jan 2025 06:09 AM

சாலை விபத்தை தடுக்க விதிகளை பின்பற்றுவதோடு ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை அவசியம்: முன்னாள் டிஜிபி அறிவுறுத்தல்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சென்னை காவல்துறை, ராதாத்ரி நேத்ராலாயா கண் மருத்துவமனை, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாமை, முன்னாள் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் அடையாறு போக்குவரத்து பணிமனையில் தொடங்கி வைத்தார். ராதாத்ரி நேத்ராலாயா கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் வசுமதி வேதாந்தம், காவல் துணை ஆணையர் மெகலினாஐடன் உடனிருந்தனர்.

சென்னை: ஓட்டுநர்களுக்கு பார்வை தொடர்பாக ஏதாவது பிரச்சினை இருந்தால், உடனடியாக கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஓய்வு பெற்ற டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் அறிவுறுத்தினார்.

பெருநகர சென்னை காவல்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை காவல்துறை, ராதாத்ரி நேத்ராலாயா கண் மருத்துவமனை, மாநகர போக்குவரத்து கழகம் ஆகியன சார்பில், மாநகர போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம் சென்னை அடையாறு சாஸ்திரி நகர் போக்குவரத்து பணிமனையில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமை ஓய்வுபெற்ற டிஜிபியும், முன்னாள் லோக்பால் உறுப்பினருமான அர்ச்சனா ராமசுந்தரம் தொடங்கி வைத்து பேசியதாவது: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் ஒரு தரவில், சாலை விபத்து தொடர்பாக பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருந்தது. 2022-ம் ஆண்டு தரவில், தமிழகத்தில் 64 ஆயிரம் விபத்துகள் பதிவாகி இருந்தன. இது, மிக அதிகமாகும். அதிகமான விபத்து மண்டலம் தமிழகம் என அந்த தரவில் இருந்தது.

இது, எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. சாலை விபத்தை தடுக்க, விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஓட்டுநர்களுக்கு பார்வை தொடர்பாக ஏதாவது பிரச்சினை இருந்தால், உடனடியாக கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மற்ற ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ராதாத்ரி நேத்ராலாயா மருத்துவ இயக்குநர் டாக்டர் வசுமதி வேதாந்தம் பேசியதாவது: பேருந்து பயணத்தின்போது எல்லாருடைய உயிரையும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்தான் பாதுகாக்கின்றனர். அவர்கள் பணி மகத்தானது. அவர்களுக்கு சிறிய உதவியாக இந்த கண் மருத்துவ முகாம் நடத்துகிறோம்.

ஒவ்வொரு பணிமனையாக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு கண் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். முகாமில் முழுமையாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கண்ணாடி அணிய வேண்டும் என்றால் அதற்கான பரிந்துரை செய்வோம். கண்ணாடி தேவைப்பட்டால், இலவசமாக கண்ணாடி வழங்குவோம். பார்வை பிரச்சினையை சரிசெய்து, சாலை விபத்தை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் மெகலினாஐடன் கூறியதாவது: வேகமாக பயணித்தல், அதிகாலையில் ஓட்டுவது ஆகியவற்றால் அதிக விபத்துகள் நடைபெறும். பேருந்து ஓட்டுநர் உடல்நலத்தை கவனித்து கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேல் உடல் நல பிரச்னை இருந்தால், அறிகுறி தெரியவரும்.

உடனடியாக, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உதவி ஆணையர் பாஸ்கரன், சாலை விபத்தை தடுப்பதற்கான தொண்டு (எஸ்பிஆர்ஏ) நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x