Published : 26 Jan 2025 06:51 AM
Last Updated : 26 Jan 2025 06:51 AM

2 ஐஜி உள்ளிட்ட தமிழக காவல் துறையினர் 23 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு

சென்னை: சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐ.ஜி. துரைக்குமார், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெச்சத்தக்க பணிக்கான காவல் விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விவரம் வருமாறு: சென்னை மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரி (எஸ்பி) ஜெயலட்சுமி, மயிலாடுதுறை எஸ்பி கோ.ஸ்டாலின், தமிழ்நாடு அதிதீவிரப் பயிற்சி பள்ளி எஸ்பி ஜே.பி. பிரபாகர், வேலூர், சேவூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15-ம் அணி துணைத் தளவாய் சி.அசோகன், கரூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி தி.பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி தினகரன், கோவை உக்கடம் சரக உதவி ஆணையர் அ.வீரபாண்டி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சிபிசிஐடி கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ரா.மதியழகன், சென்னை ஆயுதப்படை (2) உதவி ஆணையர் ஜெ.பிரதாப் பிரேம்குமார், சேலம் போக்குவரத்து உதவி ஆணையர் ந.தென்னரசு, தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியக டிஎஸ்பி மா.பாபு, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை டிஎஸ்பி ஜே.ஜெடிடியா, கோவை காட்டூர் சரக உதவி ஆணையர் டி.எச்.கணேஷ், கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி பா.சந்திரசேகரன் ஆகியோரும் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி மைய உதவி தளவாய் வே.சுரேஷ்குமார், வேலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி கு.வேலு, சேலம் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் மா.குமார், சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் சு.அகிலா, கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆய்வாளர் ம.விஜயலட்சுமி, சென்னை பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் எம்.சி.சிவகுமார், தமிழ்நாடு அதிதீவிரப் பயிற்சி பள்ளி (சென்னை) ரா.குமார் என மொத்தம் 21 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x