Published : 26 Jan 2025 06:26 AM
Last Updated : 26 Jan 2025 06:26 AM
சென்னை: நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைக்கிறார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7.50 மணி அளவில் தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலினும், அவரை தொடர்ந்து, ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ரவியும் விழா நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். பிறகு, முப்படை தளபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள்.
இதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்படும். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்படும்.
தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவினர், தேசிய மாணவர் படையினர், தமிழக வனத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, பள்ளி, கல்லூரிகளின் பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணிய பிரிவினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொள்வார்.
இதன்பிறகு, தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 25 வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறும்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
பார்வையாளர்கள் விழாவை பார்க்க, தமிழக பொதுத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் நின்று பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் தேநீர் விருந்து முதல்வர், அமைச்சர்கள் புறக்கணிப்பு: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆண்டும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் புறக்கணிக்கிறார். விஜய் தரப்பில் இருந்து நேற்று வரை தகவல் இல்லை.
இந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு விழாவில் பங்கேற்க மதுரை செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் செல்வதால், தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT