Published : 26 Jan 2025 02:24 AM
Last Updated : 26 Jan 2025 02:24 AM
புதுக்கோட்டை / தருமபுரி: குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே பகுதியைச் சேர்ந்தவரும், மணமேல்குடி காவல்நிலைய போலீஸ்காரருமான ஜெ.முரளி ராஜா(32), வேங்கைவயல் பி.சுதர்ஷன்(20), கே.முத்துகிருஷ்ணன்(22) ஆகியோர் குற்றம் செய்ததாக சிபிசிஐடி போலீஸாரால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புகார் கூறியவர்களையே குற்றம் புரிந்ததாக போலீஸார் கூறுவதாகக் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று வேங்கைவயலில் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். இதையடுத்து, அப்பகுதியில் ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையில் 150 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், வேங்கைவயல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஊருக்குள் செல்ல அனுமதிக்கவிலலை.
இந்நிலையில், வேங்கைவயலுக்கு செல்ல முயன்ற விசிக மாவட்டச் செயலாளர்கள் வெள்ளை நெஞ்சன், இளமதி அசோகன் உட்பட அக்கட்சியினர் 8 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கு வேங்கைவயல் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே விசிக மாவட்ட துணைச் செயலாளர் தெ.கலைமுரசு தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், சிபிசிஐடி விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விசிகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கூட்டணியில் முரண்பாடு வராது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கை நிறைய கேள்விகளை எழுப்புகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வேங்கைவயல் மக்கள் வெளியே செல்லவோ, வெளியூர் ஆட்கள் ஊருக்குள் செல்லவோ போலீஸார் மறுப்பது ஏன்?
அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணையை கேட்பதால், திமுக கூட்டணியில் முரண்பாடு என்பது தவறு. பிரச்சினைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. கூட்டணியில் இருப்பாதல் அரசு செய்யும் அனைத்தையும் ஆதரிக்க வேண்டியதில்லை. பெரியாரை விமர்சிக்கும் தகுதி சீமானுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஐ விசாரணை கோரவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை என்னவென்று பார்ப்போம். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி கோரவில்லை.
கண்ணியம் மிக்க பதவியில் உள்ள ஆளுநர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகராக செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகாவில் இணைந்து செயல்படலாம். கடந்த காலங்களில் பெரியாரை புகழ்ந்த சீமான், தற்போது அவருக்கு வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதால், பெரியாரை விமர்சிக்கிறார். இவ்வாறு முத்தரசன் கூறினார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், "வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும். சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT