Published : 23 Jan 2025 07:51 PM
Last Updated : 23 Jan 2025 07:51 PM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி டைடல் பார்க் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தநிலையில், தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் 'இயக்க அனுமதி' சான்று பெறுவதற்காக டைடல் பார்க் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. விரைவில் இந்த திட்டத்திற்கு மதுரையில் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது.
சென்னை, கோவையை போல், மதுரையிலும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வகையில் மாட்டுத்தவாணியில் கடந்த 2022ஆம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.280 கோடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐ.டி. பார்க் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் கடந்த சில ஆண்டாக அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டநிலையில் தற்போது செயல்வடிவத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை டைடல் பார்க் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம், 40 சதவீதம் பங்களிப்பாக மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுத்துள்ளது. மண் பரிசோதனை, டெண்டர், பல்வேறு கட்ட ஆய்வுகள் முடிந்தநிலையிலும், இந்த திட்டத்திற்கு தற்போது வரை கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. அதனால், விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 'இயக்க அனுமதி' சான்றுக்கு டைடல் பார்க் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைடல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏற்கெனவே டெண்டர் விடப்பட்ட நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் 'இயக்க அனுமதி' சான்று கிடைத்ததும், மாட்டுத்தாவணியிலே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு பணிகள் தொடங்கிவிடும். அடிக்கல் நாட்டுவிழாவுக்காக தமிழக அரசிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மீண்டும் 'டைடல் பார்க்' திட்டத்தில் மாற்றமா? - சமீபத்தில் டைடல் பார்க் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் சில மாற்றங்கள் செய்து டைடல் பார்க் லிமிடெட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், மீண்டும் இந்த திட்டம் தாமதமாக வாய்ப்புள்ளதாக மதுரை மாவட்ட மக்களும் ஆதங்கமடைந்தனர். ஆனால், டைடல் பார்க் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மாற்றங்கள் செய்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுவிட்டோம். மீண்டும் எந்த மாற்றங்களும் இல்லை, இனி கட்டுமானப்பணி தொடங்கிவிடும்,'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT