Published : 23 Jan 2025 03:49 PM
Last Updated : 23 Jan 2025 03:49 PM
சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பு கொண்டது. இதில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்து தினமும் 5,900 டன் குப்பை உற்பத்தியாகிறது. இவை சரிபாதியாக கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகளை வீடு வீடாக சேகரித்து, குப்பை தொட்டிகளில் கொட்டுவது, அவற்றை லாரிகள் மூலம் ஏற்றி சென்று, குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டுவது ஆகிய பணிகளில் 4,727 நிரந்தர பணியாளர்கள் உள்ளிட்ட 18,845 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்க காலத்தில், வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் அப்படியே குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டன. இதனால் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 269 ஏக்கர் பரப்பளவிலும், பெருங்குடியில் 200 ஏக்கர் பரப்பளவிலும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.
இந்த குப்பை கொட்டும் வளாகங்களையொட்டி, சுமார் 500 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால், பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. குப்பையிலிருந்து மதிப்புள்ள பொருட்களை சேகரிப்போர், உலோக பொருட்களை எளிதில் எடுப்பதற்காக அவ்வப்போது குப்பைகளை தீயிட்டு கொளுத்துகின்றனர்.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் காற்று மாசு, சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துவிடுகிறது. இதுபோன்று நாட்டின் பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிகள் இப்பிரச்சினையை எதிர்கொள்வதால், நகர்ப்புறங்களில் குப்பைகளை கையாள்வதை முறைப்படுத்த, திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த 2000-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இறுதியாக 2016-ம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகள் வெளியிடப்பட்டது.
இந்த விதிகளின்படி, வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து, வீடு வீடாக வரும் உள்ளாட்சி அமைப்பின் குப்பை சேகரிப்பாளரிடம் மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதன் மூலம், மக்கும் குப்பைகளை உரமாக்க முடியும். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்ப முடியும். இதன்மூலம் குப்பைகள், கிடங்குகளுக்கு செல்வது குறையும். இதற்கு மாநில அரசுகள் முறையாக நிதி ஒதுக்காததால், இந்த விதிகள் ஏட்டளவிலேயே இருந்தது.
பின்னர் மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை ஒதுக்கியது. இதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் 196 இடங்களில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள், 23 இடங்களில் உயிரி- எரிவாயு தயாரிக்கும் மையங்கள், 5 இடங்களில் மின்சாரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக குப்பைகளை வகை பிரித்து பெறுவது இன்றும் சவாலாக உள்ளது. இதனால் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து கொடுக்கும் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த தூய்மைப் பணியாளர் கூறும்போது, “பொதுமக்கள் வீடுகளில் குப்பைகளை வகை பிரித்து வழங்காததால், அந்த சுமை எங்கள் தலையில் விழுகிறது. நாங்கள் வீடு வீடாக சேகரித்து, பின்னர் ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அங்கு வகை பிரித்து, உரம் தயாரிக்கவும், எரிவாயு தயாரிக்கவும் அனுப்புகிறோம்.
பல நேரங்களில் பிளேடு, சர்க்கரை நோய்க்கு மருந்து ஏற்றும் ஊசிகள் உள்ளிட்டவை வகை பிரிக்காமல் குப்பைகளோடு சேர்த்து கொட்டுவதால், நாங்கள் கையுறை அணிந்திருந்தாலும் எங்கள் கையில் குத்தி காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வலியுடன் உணவுகளை உண்ண முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன். வீடுகளில் ஒரு நிமிடத்தில் வகை பிரிக்க வேண்டிய பணியை நாங்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டியுள்ளது. இதை மக்கள் உணர்ந்து வகை பிரித்து வழங்க வேண்டும்” என்றார்.
கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பெண் தூய்மை பணியாளர் கூறும்போது, “வீட்டு குப்பைகளுடன் பலர் உடைந்த பல்பு, டியூப் லைட் மற்றும் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, மது பாட்டில்களையும் சேர்த்து கொடுக்கிறார்கள். அவற்றை வகை பிரிக்கும்போது, பல நாட்கள் என் கைகளை கிழித்துள்ளன. வேறு வழியில்லாமல் இத்தொழிலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் நலன் கருதி பொதுமக்கள் குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும்” என்றார்.
வியாசர்பாடியை சேர்ந்த பெண் தூய்மைப் பணியாளர் கூறும்போது, “மகளிர் பயன்படுத்தும் நாப்கின்களை தனியாக கொடுக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அதை சில நாட்கள் வீட்டில் வைத்திருந்து, பின்னர் குப்பைகளோடு சேர்த்து கொட்டுகின்றனர்.
அதை கைகளால் வகை பிரிக்கும்போது அருவருப்பு தான் ஏற்படுகிறது. பொதுமக்கள் எங்களை, அவர்களின் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, மாநகராட்சி அறிவுறுத்தல்படி குப்பைகளை வகை பிரித்து வழங்க வேண்டும்” என்றார்.
குப்பைகளை வகை பிரித்து வழங்காதது குறித்து கொருக்குப்பேட்டையை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறியதாவது: நாங்கள் வகை பிரித்து கொடுத்தாலும் வீடு வீடாக வந்து குப்பை பெறும் பணியாளர் ஒன்றாகதான் கொட்டிக்கொண்டு செல்கிறார். எங்கள் உழைப்புதான் வீணாகிறது.
மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்துகிறோம். வேலை செய்யும் நிறுவனம் மூலமாக தொழில் வரியும் பிடித்தம் செய்கிறது. எதற்கெடுத்தாலும் வரியை போட்டு சம்பாதிக்கும் அரசு, போதிய ஆட்களை நியமித்து வகை பிரித்துகொள்ள வேண்டியது தானே. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, குப்பைகளை வகை பிரிக்காமலோ, பொது இடத்தில் கொட்டினாலோ மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கிறது. ஆனால் விதிகளை மீறும் தனி நபருக்கு அபராதம் விதிப்பதில்லை. அவர்களுக்கு அபராதம் விதித்தால்வாக்கு வங்கியை பாதிக்கும் என அஞ்சுகின்றனர். வீடுகளுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே குப்பைகளை வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய முடியும்” என்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, குப்பைகளை வகை பிரித்து வழங்காத அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பொது இடங்களில் குப்பைகளை கொட்டியது தொடர்பாக கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.2.70 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை 100 சதவீதம் வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றனர்.
மாநகரின் தூய்மையையும், சுற்றுச்சூழலையும் காப்பது மக்கள் அனைவரின் கடமை. அந்த பொறுப்புணர்வுடன் அனைவரும் வீட்டு அளவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும். மாநகராட்சியின் சேவைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT