Published : 22 Jan 2025 10:20 AM
Last Updated : 22 Jan 2025 10:20 AM
கடந்த அக்டோபரில் சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரியை திட்டமிட்டு தவிர்த்ததாக சர்ச்சை வெடித்தது. இதை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன்” என்று சொன்னார்.
தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையாகியுள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆரம்பத்தில், தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்றாகத்தான் இருந்தது. 1970-க்குப் பிறகுதான் புதுச்சேரிக்கென தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து பிறந்தது.
அண்ணா முதல்வராக இருந்தபோது, மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக்க விரும்பினார். அவரது மறைவுக்குப் பிறகு அடுத்து முதல்வராக வந்த கருணாநிதி, 1970-ல் அரசாணை பிறப்பித்து அண்ணாவின் கனவை நனவாக்கினார். அப்போது புதுச்சேரியிலும் திமுக தான் ஆட்சியில் இருந்தது. முதல்வராக இருந்த பரூக் மரைக்காயர், மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலையே புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரித்தார்.
1972-ல் தான் புதுச்சேரிக்கென தனியான தமிழ்த்தாய் வாழ்த்து உதயமானது. இதுபற்றி நம்மிடம் பேசிய புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தலைவர் முத்து, “புதுச்சேரி கம்பன் விழாவில், விழா தலைவர் கோவிந்தசாமி. பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன், புதுவை சிவம், புலவர் சித்தன் ஆகியோர் புதுச்சேரிக்கென தனி தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் என முதல்வர் பரூக் மரைக்காயரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர். ‘அப்படியானால் எந்தப் பாடலை வைக்கலாம்?’ என முதல்வர் கேட்டார். ‘மண்ணின் மைந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடலை வைக்கலாம்’ என அனைவரும் ஒருமித்து தெரிவித்தனர்.
அதன்படியே, பாரதிதாசன் எழுதிய ‘இசையமுது’ என்ற தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடலான ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற பாடலை புதுச்சேரிக்கான தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்க முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 4.1.72-ல் முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டு பாவேந்தரின் பாடல் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தானது” என்றார்.
‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ பாடல் உருவானது தொடர்பாக கவிஞர் புதுவை சிவத்தின் மகனான முனைவர் சிவ. இளங்கோவிடம் கேட்டதற்கு, “எனது அப்பா பலமுறை இப்பாடல் உருவான வரலாறைத் தெரிவித்துள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பாடலில் மட்டுமல்ல... இசையிலும் தேர்ந்தவர். தினமும் அவர் வீட்டில் பாடல், இசை, நடனம் என்று நாடக ஒத்திகை நடக்கும்.
அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர், அசோக்குமார் படத்தில் பாடிய ‘பூமியில் மானிட ஜென்மம் அடைந்து’ என்ற பாடல் மிகப் பிரபலம். அப்பாடலை நாகஸ்வரக் கலைஞர் ஒருவர் மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்ட பாவேந்தர், அதே ராகத்தில் பொருந்தும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிகளை எழுதினார். ஆனால், திரைப்படப் பாடல் தரும் அனுபவத்துக்கு மாறாக பாவேந்தரின் பாடல் உற்சாகத்தையும் மகிழ்வையும் தமிழ் மீது பற்றையும் ஏற்படுத்தும்” என்றார்.
புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மண், தமிழர், தமிழ் இனம் ஆகியவற்றை போற்றும் வகையில் 16 வரிகளில் உருவாகி இருப்பது அதன் தனிச்சிறப்பு. இரண்டு மாநிலத்துக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துகள் வேறாக இருந்தாலும் மற்ற அனைத்திலுமே புதுச்சேரியும் தமிழகமும் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள் தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT