Published : 20 Jan 2025 06:24 AM
Last Updated : 20 Jan 2025 06:24 AM

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க பிரத்யேக ஒழுங்கு முறை ஆணையம் தேவை: சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தல்

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற ‘தி இந்து’ குழுமத்தின் 13-ம் ஆண்டு இலக்கிய திருவிழா நிறைவு நாளில் எதிர்கால சுகாதார தேவைகள் தொடர்பான அமர்வில் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்ரியா சாஹு, தி இந்துவின் ஆசிரியர் (சுகாதாரப் பிரிவு) ரம்யா கண்ணன் ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். | படம்: பி.ஜோதிராமலிங்கம் |

சென்னை: சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரத்யேக ஒழுங்கு முறை ஆணையம் நமக்கு தேவை என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

‘தி இந்து’ குழுமம் சார்பில் இலக்கிய திருவிழா (Lit for Life) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-ம் ஆண்டுக்கான 13-வது இலக்கிய திருவிழா-2025 சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கட சுப்பாராவ் கலையரங்கத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இறுதி நாளில் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய அமர்வுகள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

அதன்படி எதிர்கால சுகாதார தேவைகள் தொடர்பான அமர்வில் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்ரியா சாஹு, தி இந்துவின் ஆசிரியர்(சுகாதாரப் பிரிவு) ரம்யா கண்ணன் ஆகியோர் கலந்துரையாடினர்.

அப்போது சவுமியா பேசியதாவது: மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்நலம் குறித்த ஒருங்கிணைந்த தரவுகளை பகுப்பாய்வு செய்வது அவசியமாகும். அதை கொண்டு விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் மற்றும் நமது உணவு பாதுகாப்பு குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரத்யேக ஒழுங்கு முறை ஆணையம் தேவையாகும்.

தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம், பல்லுயிர்களின் அழிவு மற்றும் நிலம், நீர் மாசுபடுதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. நவீன வாழ்க்கை முறையின் அழுத்தங்கள், சுகாதாரப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்தியாவில் ஆரோக்கியமற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

சுகாதார கடட்மைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதன் மூலமாக இந்த பிரச்னைகளை சரிசெய்யலாம். அதேநேரம் செயற்கை நுண்ணறிவு உட்பட வளரும் தொழில்நுட்பங்களால் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் கணிப்புகள் மேம்பட்டுள்ளன. இவை அவசர சூழல்களை கையாள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உதவிகரமாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவை ஆச்சர்யப்படுத்திய தேர்தல் முடிவுகள் தொடர்பான அமர்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசும்போது, ‘1980-ல் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. எம்ஜிஆரின் ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்ட நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து எம்ஜிஆரை எதிர்த்து களம் கண்டது.

எம்ஜிஆர் முதல்வராக வேண்டுமென சட்டப்பேரவை தேர்தலில் தீர்க்கமாக திமுக கூட்டணியை புறக்கணித்த தமிழக மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் தீர்க்கமாக எம்ஜிஆரை புறக்கணித்தனர். எனவே, வாக்காளர்கள் தங்களுக்கு வேண்டியவற்றில் தெளிவாக எப்போதும் இருப்பார்கள்’’என்றார்.

அதே அமர்வில் தி இந்து குழும வெளியீட்டு பிரிவு இயக்குநர் என்.ராம் பேசுகையில், ‘கடந்த தேர்தல் முடிவுகளில் சிறு, சிறு விஷயங்கள் ஆச்சரியங்களை அளித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முழுவதும் பொய்த்து போனது. பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்ற போதும், பெரும்பான்மை கிடைக்காததால் அதை முழுமையான வெற்றியாக கருத முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் இருந்த களம் சற்று மாறியிருந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு பன்முகத்தன்மையும், பன்மைத்துவமுமே அடித்தளம் என்பதை உணர முடிந்தது’’என்று தெரிவித்தார்.

இதுதவிர எழுத்தில் வாழ்விடங்கள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற தலைப்பிலான அமர்வில் எழுத்தாளர் எழுத்தாளர்கள் ஆபிரகாம் வர்கீஸ், பீட்டர் பிராங்க்போன் மற்றும் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் நிர்மலா லக்ஷ்மண் ஆகியோர் கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x