Published : 18 Jan 2025 09:34 PM
Last Updated : 18 Jan 2025 09:34 PM

மதுரை மாட்டுத்தாவணி ‘டைடல் பார்க்’ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி - எப்போதுதான் கட்டுமானம்?

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் அமைய இருக்கும் ‘டைடல் பார்க்’ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் அறிவித்து 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் கட்டமானப் பணி கூட தொடங்கப்படாததால், சுற்றுச்சூழல் அனுமதி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பா என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை தூங்கா நகரம், பண்பாட்டு தலைநகரம், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் என பல பாரம்பரிய அடையாளங்களுடன் மதுரை போற்றப்பட்டாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே உள்ளது. சென்னை, கோவை, ஓசூரைப்போல் சொல்லிக்கொள்ளும்படி மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பெரிய தொழிற்பேட்டைகளும் இல்லை. சுற்றுலாவையும், ஆன்மீகத்தையும் நம்பியே மதுரையின் வர்த்தகமும், வேலைவாய்ப்புகளும் உள்ளன.

மதுரையில் மட்டுமில்லாது, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. அதனால், படித்த இளைஞர்கள், வேலைத்தேடி உறவுகளையும், சொந்த ஊர்களையும் விட்டுவிட்டு சென்னை, கோவை, பெங்களூரு போன்ற வெளியூர்களுக்கு படையெடுக்கும் நிலை தொடர்கிறது. இந்தநிலையை போக்கி உலகளவில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த மதுரை மாட்டுத்தவாணியில் கடந்த 2022-ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.280 கோடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐ.டி., பார்க் திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், இந்த திட்டம் அறிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை கட்டுமானப்பணி கூட தொடங்கப்படவில்லை. தற்போது இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முயற்சியால், மதரைக்கு பிறகு தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் அறிவிக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

அதுபோல், சேலம் மாவட்டம் கருப்பூரில் அறிவிக்கப்பட்ட மினி டைடல் பூங்கா கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரும், திமுகவில் செல்வாக்குமிக்க அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் மதுரையை சேர்ந்தவராக இருந்தும், 2 ஆண்டுக்கு முன் அறிவித்த மாட்டுத்தாவணி ‘டைடல் பார்க்’ திட்டம் மாநகராட்சி நிர்வாகம் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு கொடுத்ததோடு நிற்கிறது.

சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கூட அதிமுக எதிர்கட்சித்தலைவர் கவுன்சிலர் சோலைராஜா பேசும்போது, “மதுரை டைடல் பார்க் திட்டத்துக்கு ரூ.280 கோடியில் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ளது. ஆனால், மதுரையுடன் அறிவிக்கப்பட்ட திருச்சியில் இந்த திட்டம் ரூ. 415 கோடியில் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையைச் சேர்ந்தவராக இருந்தும் சொந்த மாவட்டத்துக்கு அதிக நிதியை பெற்றுத்தர தவறி விட்டார். இதுகுறித்து அமைச்சர் கவனத்துக்கு கொண்டுசென்று கூடுதல் நிதி ஒதுக்க முயற்சிக்க வேண்டும்,” என்றார்.

இதுகுறித்து சோலைராஜா கூறுகையில், “தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை, தொழில்துறை சார்பில் பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்கள், தொடங்கப்பட்டாலும் முறையான கண்காணிப்பு, ஆதரவு இல்லாததால் அவை பெயரளவுக்கே செயல்படுகின்றன. மதுரையில் கடந்த காலத்தில் தொடங்கப்பட்ட வடபழஞ்சி மாட்டுத்தாவணி ‘ஐடி-பார்க்’ இன்னும் முழுமையாக வரவேற்பு பெறவில்லை. மதுரை பாண்டிகோவில் ஐடி பார்க் திட்டத்தில் மட்டும் ஹெச்சிஎல், ஹனிவேல், போன்ற முக்கிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தற்போது இந்த ஐடி பார்க் சிறப்பாக செயல்படத் தொடங்கிவிட்டதால் பல ஆயிரம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதுபோன்ற தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புள்ள மதுரையில் அதிகளவில் தொடங்க வேண்டும். மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ திட்டத்துக்கான கட்டுமானப்பணியில் குற்றச்சாட்டுகளை அடுக்கும் தமிழக அரசு தாங்கள் அறிவித்த மாட்டுத்தாவணி டைடல் பார்க் திட்டம் மட்டும் ஏன் இன்னும் தொடங்கவில்லை. அவ்வப்போது அறிவிப்புகள் மட்டுமே வந்தவண்ணம் உள்ளன. தற்போது அந்த அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கான முன்டோட்டமாகவே இந்த அறிவிப்பை நாங்கள் பார்க்கிறோம். தகவல் தொழில்நுடப்துறை அமைச்சர் மதுரையை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் இந்த மாட்டுத்தாவணி டைடல் பார்க் திட்டத்துக்கு கூடுதல் நிதியும், பரப்பளவில் கட்டியும், அதிகளவு நிறுவனங்களை வரவழைத்தும் தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தலாம். மதுரையை பழமைக்கும், பாரம்பரியத்துக்கும் மட்டுமே அடையாளப்படுத்துவதை விட்டு நவீன காலத்துக்கு தகுந்தார்போல் தொழில்துறை, வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைய செய்ய வேண்டும்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்கள்தான் இன்று சென்னை, பெங்களூரு மட்டுமில்லாது அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஐடி துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்கள், தங்கள் ஊரில் சாதிக்க, தமிழக அரசு பெயரளவுக்கு அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், இந்த திட்டத்தை விரைவாக தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,” என்றார்.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போதுதான் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணி ஆணை ஒப்படைப்பு செய்து பணிகள் தொடங்கப்படும்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x