Published : 18 Jan 2025 12:55 AM
Last Updated : 18 Jan 2025 12:55 AM

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு எங்கெங்கு மழை?

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஓரிரு தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று சில இடங்களிலும், நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 21, 22-ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 23-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று (ஜன. 18) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும், நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 17-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., காக்காச்சியில் 5 செ.மீ., மாஞ்சோலையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x