Published : 17 Jan 2025 06:31 PM
Last Updated : 17 Jan 2025 06:31 PM
கோவை: தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் சட்ட விரோதமாக பணியில் சேரும் வங்கதேசத்தினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பிரிவுகளின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணியில் சேருபவர்களில் பலர் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிவந்த 31 பேரை போலீஸார் கண்டறிந்து கைது செய்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உதவ வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, “ஜவுளி உற்பத்தி தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த பின் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வங்கதேசத்தினர் கைது செய்யப்படும் சம்பவங்களை அடுத்து தொழில்துறையினர் எதிர்வரும் காலங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆவணங்கள் அசலா, போலியா என கண்டறிய அரசு உதவ வேண்டும்” என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் கூறும்போது, “தொழிலாளர்களிடம் ஆதார் போன்ற ஆவணங்கள் உள்ளனவா என்பதை மட்டுமே தொழில்துறையினர் கேட்டு பெற முடியும். அவை அசலா, போலியா என்பதை கண்டுபிடிப்பது சிரமம். வங்கதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். ஆதார் போன்ற ஆவணங்களை சரிபார்க்கும் முறை குறித்து தொழில் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறும்போது, “தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் 1 கோடிக்கும் மேல் அடிப்படை வேலை செய்ய ஆட்கள் தட்டுப்பாடு உள்ளது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலி ஆவணங்களை கண்டறியும் வசதி இல்லை. அரசு, காவல்துறை மூலம் தொழில் முனைவோர்களுக்கு கைரேகை சோதனை உட்பட நவீன போர்டல் வசதியை பாஸ்வேர்ட் வழங்கி பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும். ‘ஜிஎஸ்டி’ பதிவு இல்லாத துறையினருக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட தொழில்முனைவோர் தேதியிட்ட அடையாள அட்டையை தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறும்போது, “வங்கதேசத்தில் சமீப காலமாக ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதால் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக தொழிலாளர்கள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆதார் அட்டை உண்மையா போலியா என கண்டு பிடிக்கும் வசதியை அரசு செய்து தர வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாகும்” என்றார்.
பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் சேர ஏஜென்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது இப்பிரச்சினைக்கு தீர்வு காண பெரிதும் உதவும் என்றும், தொழில்துறையினர் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT