Published : 13 Jan 2025 01:31 PM
Last Updated : 13 Jan 2025 01:31 PM

பொங்கல் பண்டிகையன்று நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (ஜன.14) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜன.13) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.14ம் தேதி, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன.15ம் தேதி, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.16 மற்றும் ஜன.17ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.18ம் தேதி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.19ம் தேதி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (ஜன.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், ஜன.13 முதல் முதல் ஜன.16ம் தேதி வரை, தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில், இன்று (ஜன.13) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x