Published : 13 Jan 2025 12:34 PM
Last Updated : 13 Jan 2025 12:34 PM

சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியை தொடங்க தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கோப்புப்படம்

சென்னை: கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை தொடங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பசுமை பாதுகாப்பு என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சையது கட்டுவா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
“சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கி வரும் மீன் அங்காடிக்கு பதிலாக புதிய நவீன மீன் அங்காடியை 2 கோடி 21 லட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 102 கடைகள் அமைக்க உள்ள இந்த அங்காடியில் திடக்கழிவு மேலாண்மையை முறையாக அமல்படுத்தாமல் தொடங்க கூடாது.

1022 சதுர மீட்டர் பரப்பில் அமைய உள்ள நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.
மீன் அங்காடியில் முறையான திடக்கழிவு மேலாண்மையும், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியும் ஏற்படுத்தாவிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மீன் கழிவுகள் கூவம் நதியில் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், கூவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் வீணாகும். எனவே, முறையான திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்காமல் நவீன மீன் அங்காடியை தொடங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். நவீன மீன் அங்காடியில் முறையான வாகனம் நிறுத்தம், தூய்மை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x