Published : 10 Jan 2025 09:05 PM
Last Updated : 10 Jan 2025 09:05 PM
பொன்னேரி: பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றத்தால் மீன்பிடி படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, மணிபாலன், செல்வம், மோகன், அரங்கன்குப்பத்தைச் சேர்ந்த அப்பு ஆகிய 5 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடி படகு ஒன்றின் மூலம் பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்களை பிடித்து கொண்டு இன்று காலை பழவேற்காடு ஏரி கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது. இதையடுத்து, கடலில் தத்தளித்த 5 மீனவர்களில், தட்சிணாமூர்த்தி, மணிபாலன், அப்பு ஆகிய 3 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.
மோகன், செல்வம் ஆகியோர் காணாமல் போன நிலையில், இதுகுறித்து சக மீனவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் மீன்வளத் துறையினர், கடலோர காவல் படையினர், காவல் துறையினர், மீனவர்கள், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மோகன், செல்வம் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மோகன் என்ற மீனவரின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் காணாமல் போன செல்வம் என்ற மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT