Published : 10 Jan 2025 08:15 PM
Last Updated : 10 Jan 2025 08:15 PM
சென்னை: சிறுமிகள் உட்பட 18 வயதுக்குட்பட்ட வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கவும், பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வகை செய்யக் கூடிய இரண்டு சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இவற்றின் மீதும் சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படும்.
பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு மற்றும் 2023-ம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதா, 2023-ம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷாஷா சன்ஹிதா ஆகியவற்ரை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு ஆகிய இரண்டு சட்டமுன்வடிவுகளை தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்த 2 சட்டமுன்வடிவுகள் மீதும் நாளை (ஜன.11) சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படும். இதன் விவரம்:
தண்டனை விவரம்: > டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதம் இருந்ததை, முதல்முறை தண்டனை தீர்ப்பின் பேரில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் நீட்டிக்கப்படலாம்.
> இரண்டாம் அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின் போது 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
> வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு முன்பு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் இருந்தது. தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் சிறைதண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம்.
> கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் லைட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பது ரூ.50 ஆயிரம் அபராதமாக மாற்றப்படுதல் வேண்டும்.
> வன்புணர்ச்சிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை முதல் அபராதத்துடன் ஆயுட்காலம் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம்.
> காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்காலம் வரை சிறை தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.
> 12 வயதுக்குட்பட்ட பெண்ணை வன்புணர்ச்சி செய்தால் கடுங்காவல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.
> கூட்டு வன்புணர்ச்சி செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை. 18 வயதுக்குட்படட் பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை.
> மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை.
> பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.
> பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதலுக்கு அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.
> பெண்ணை பின் தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. அது தொடர்ந்தால் அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை.
> ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை.
> ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் தண்டனை வரை வழங்கப்படும்.
முதல்வர் பேசியது என்ன? - இந்த இரு சட்டத்திருத்த முன்வடிவுகளை அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின், “சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரக்கூடிய அரசாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம். இதன்மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது.
இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும், அதிகமான சமூகப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதில் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்கமுடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
இந்த வகையில் BNS சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக BNS மற்றும் BNSS சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT