Published : 10 Jan 2025 07:17 PM
Last Updated : 10 Jan 2025 07:17 PM
மதுரை: “டங்ஸ்டன் திட்டத்தால் நாடு வல்லரசு ஆகும் என்றால், எங்களுக்கு தேவையில்லை” என, மேலூர் ஆர்ப்பாட்டத்தில் தொல். திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் பேருந்து நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொல். திருமாவளவன் பேசியது: "பெரியாறு பாசன விவசாய நிலங்கள், கிராமங்களை பாதுகாக்க ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை பாராட்டுகிறோம்.
அதேநேரத்தில் மேலூர் , அரிட்டாபட்டி சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளமாக பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்றவேண்டும். 100 விழுக்காடு இத்திட்டம் வராது என்றாலும், தமிழக அரசின் ஒப்புதல் இன்றி இத்திட்டத்தை நடைமுறைபடுத்த முடியாது. மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்த சுரங்க அனுமதியை மத்திய அரசு கட்டுபாட்டில் மாற்றியது. இத்திட்டம் செயல்பட தமிழக அரசின் அனுமதி அவசியம் தேவை. நான் முதல்வராக இருக்கும் வரை அனுமதி கொடுக்க மாட்டேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவுக்கு எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதை பாஜக வேடிக்கையாக ஆதரிக்கின்றது. டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசுதான். அனைத்து கட்சிகளும், எல்லா அமைப்புகளும் திட்டத்தை எதிர்க்கின்றோம். இத்திட்டத்தை கைவிடுவது தொடர்பாக டெல்லியில் மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினேன்.
‘உங்க அரசு அனுமதி இன்றி எதுவும் செய்ய முடியாது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் டெல்லி அரசுக்கு இல்லை. உங்களுக்கு தான் கிடைக்கும்’ என மத்திய அமைச்சர் கூறினார். ஆனாலும் நான் ஏற்கவில்லை. அரிட்டாப்பட்டி பகுதியில் அரிய வகை பறவைகள் வசிக்கின்றன. இப்பகுதியை பகுதியை அளிக்காமல் பாதுகாக்க வேண்டியது மனித கடமை. காடுகளை அளித்தால் மனிதன் வாழ முடியாது. நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்கவேண்டும். வனத்தை பாதுகாத்தால் தான் மனித குலம் காக்க முடியும்.
தமிழகத்தில் முதல் பாரம்பரிய பல்லுயிர் தளம் என அறிவிக்கப்பட்ட பகுதி அரிட்டாபட்டி பகுதியில் 2,300 ஆண்டுக்கு முந்தைய தமிழ் கல்வெட்டு இருந்துள்ளது. இங்கு தமிழி, வட்டெழுத்து உள்ளிட்டவை கிடைக்கப் பெற்றன. நமது தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து கிடைக்க காரணமாகவும் இருந்தது. கீழடியில் எழுத்து, பானை ஓடுகள் அதற்கு ஆயிரம் ஆண்டுக்கு முந்தியது.
பவுத்த சமண துறவிகள் வசிப்பிடமாக இருந்த கற்படுகைகள் மாங்குளம், கழிஞ்சமலை உள்ளிட்ட இடங்களில் உள்ளன. மனிதன் எங்கு சென்றாலும் சொந்த ஊருக்கு வந்தால் தான் நிம்மதி கிடைக்கும். இதேதான் விலங்குகளுக்கும் கிடைக்கும். டங்ஸ்டன்காக இவ்விடம் அளிக்கப்பட்டால் லட்சக்கணக்கான உயிரினங்களும் அழியும்.
ஆயிரம் கிலோ பாறையை உடைத்து 1.5 கிராம் டங்ஸ்டன் மட்டுமே எடுக்க முடியும். அதை எடுத்த பிறகு உருக்கி, கொதிக்க வைத்து பிரித்து எடுக்க வேண்டும். இதற்கு தண்ணீர் தேவை. அதை கொண்டு செல்ல சாலை வசதி தேவை.இதற்காக ரிங் ரோடு அமைத்து, தண்ணீருக்காக வைகை -குண்டாறு திட்டத்தை கொண்டு வரப் பார்க்கின்றனர். கழிவுகளை (சாக்கடை) இம்மண்ணில் தான் போட முடியும். கெப்னியம், ஆர்க்சினியம் போன்ற உலோகங்களை எல்லாம் பிரித்து எஞ்சிய கழிவுகளை கொட்டினால் காற்று, மண் பாதிப்படையும்.
5 ஆயிரம் ஏக்கர் பரப்பு என்பது சிவகங்கை மாவட்டம் வரை நீள்கின்றது.டங்ஸ்டன் திட்டத்தால் நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் அபாயம் உள்ளது. சீனாவில் தற்போது கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் நாடு வல்லரசு ஆவது என்றால் எங்களுக்கு தேவை இல்லை. நிலங்களை விட்டு எல்லாரும் அமெரிக்கா, சிங்கப்பூருக்கா செல்ல முடியுமா?
சுற்றுச்சூழலை காக்க போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம். வெறும் அறிக்கை மட்டுமின்றி மத்திய அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டம் மூலம் எச்சரிக்கை விடுகிறோம்.
விசிக கூட்டணியில் இருக்கும் கட்சிதான் அடுத்த முறை ஆட்சி அமைக்கும். கூட்டணியை உடைக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. சர்வே ஒன்றின் மூலம் 3-வது பெரிய கட்சியாக விசிக உள்ளது. நாங்களாக சொல்ல மாட்டோம். அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பர். சாதிய முத்திரை பதித்து ஒரங்கட்டப் பார்த்தார்கள். திருமாவளவன் பின் வரிசையில் நிறுத்தினாலும், போக்கஸ் பாயிண்ட் தான். நான் இதை கர்வத்தில் சொல்லவில்லை.
தேசத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் சமூக கோட்பாடு தந்தை பெரியாரும், அம்பேத்கரும் தான். சகோதரர் சீமான் போன்றவர்கள் குதர்க்க வாதம் செய்கின்றனர். 1980-ல் இருந்து அம்பேத்கரும், பெரியாரையும் இணைத்து கொண்டு போய் சேர்த்துள்ளேன். அண்ணாமலை ஆதரிக்கிறார் என சொல்கிறார்கள். அவர் சனாதான கொட்டடியில் பிறந்தவர். மக்களை திரட்டி போராடாமல் சாட்டை எடுத்து அடிப்பாரா? அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என தெரியவில்லை. மேலூர் பகுதி மக்களின் போராட்டம் வெற்றி பெறும் வகையில் விசிக உங்களோடு துணை நிற்கும். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வழக்கை காவல்துறை திரும்ப பெறவேண்டும்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT