Published : 10 Jan 2025 06:39 PM
Last Updated : 10 Jan 2025 06:39 PM
சென்னை: அதிமுக கவுன்சிலர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் அப்போதைய அதிமுக பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சென்னை கண்ணப்பர் திடல் மீன்அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பியது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மைக் மற்றும் நாற்காலிகள் மூலமாக அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் அப்போது திமுகவில் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்களாக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, திமுக கவுன்சிலர்களாக பதவி வகித்த ஆயிரம் விளக்கு பி.டி.சிவாஜி (தற்போது பாஜகவில் உள்ளார்), திரு.வி.க.நகர் தமிழ்வேந்தன், பெரம்பூர் நெடுமாறன், மயிலாப்பூர் செல்வி செளந்தர்ராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நடந்து வந்தது. காவல் துறை தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT