Published : 10 Jan 2025 05:17 PM
Last Updated : 10 Jan 2025 05:17 PM

மதுரைக்கான பெரியாறு குடிநீர் திட்டம் தொடர்ந்து தாமதமாக காரணம் என்ன?

முல்லை பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப்பில் மதுரை குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்உந்து நிலையம்.

மதுரை: மதுரை மாநகரின் குடிநீர் பற்றாக் குறையைப் போக்குவதற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்ந்து தாமதமாவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இத்திட்டத்தை நேரடியாக ஆய்வு செய்ய அமைச்சர் கே.என்.நேரு மதுரை வரவுள்ளார். மதுரை மாநகரின் இன்றைய ஒரு நாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர்.

ஆனால், தற்போது கிடைப்பதோ 192 மில்லியன் லிட்டர்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகரில் நிரந்தரமாக குடிநீர் பற்றாக்குறை இருந்தது. கோடைக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தது. இதனால், குடிநீரையும், அன்றாட வீட்டு உபயோகத்துக்கும் மக்கள் டிராக்டர், லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதன்பிறகு கடந்த 5 ஆண்டு களாக ஓரளவு மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. குடிநீர் பற்றாக்குறை இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நிரந்தரமாக குடிநீர் பற்றாக் குறையைப் போக்க கடந்த அதிமுக ஆட்சியில் ‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ் ரூ.1653.21 கோடியில் முல்லை பெரியாறு குடிநீரை மதுரைக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் 2020-ல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. தூரத்துக்கு பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவடைந்தன.

அதைத் தொடர்ந்து பண்ணைப் பட்டியில் இருந்து மதுரை மாநகர் வரை 55.44 கி.மீ. தூரத்துக்கு பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றது. பெரியாறு குடிநீரை லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரைக்குக் கொண்டு வந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப் பட்டுவிட்டது.

தொடர்ந்து இந்த குடிநீரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் விநியோகம் செய்வதற்கு மேல்நிலைத் தொட்டிகள், வார்டுகளில் குடிநீர் விநியோக குழாய்கள், வீடுகளில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடந்து வரு கின்றன. மொத்தம் 37 மேல்நிலை தொட்டிகளில் 4 மட்டும் கட்ட வேண்டி உள்ளது.

மேலும், வார்டுகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள், வீடுகளுக்கு குடிநீர் இணைப்புப் பணிகள் 30 சதவீதம் நிறைவுற்றுள்ளன. அந்த வார்டுகளில் மட்டும் பெரியாறு குடிநீரை வீடுகளுக்கு விநியோகம் செய்து சோதனை ஓட்டம் பார்க்கப்படுகிறது. 100 வார்டுகளிலும் பணிகள் முடிய இன்னும் ஓராண்டுக்கு மேலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதமே பெரியாறு குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் மாமன்றக் கூட்டத்தில் உறுதியளித்தனர். ஆனால், பணிகள் நிறைவு பெறாததால் இந்தத் திட்டம் தாமதமாவதற்கு பல்வேறு காரணங்களும், சிக்கல்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளன.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை ஆய்வு செய்வதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஜன.12-ம் தேதி மதுரை வர இருப்பதாக கூறப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் புறநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணியை தொடங்கி வைத்துவிட்டு ‘லோயர் கேம்ப்’ அல்லது சுத்திகரிப்பு நிலையம் உள்ள பண்ணைப்பட்டிக்கு அவர் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா கூறியதாவது: அதிமுக ஆட்சியிலேயே 60 சதவீத பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டோம். தற்போதைய நிலையில் இந்தத் திட்டத்தை தொடங்கினால் 25 வார்டுகளுக்குக்கூட குடிநீரை விநியோகம் செய்ய முடியாது. லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வந்துவிட்டால் போதுமா? மக்களுக்கு வழங்க வேண்டாமா? அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே தாமதிக்கப்படுகிறது.

சட்டப்பேரவையிலேயே அமைச்சர் கே.என்.நேரு, 2023-ல் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறினார். அவர் கூறி 2 ஆண்டுகளாகப்போகிறது. ஏதாவது காரணங்களைச் சொல் லியே குடிநீர் திட்டம் என்றுகூடப் பார்க்காமல் அரசியல் செய்து இந்தத் திட்டத்தைத் திட்டமிட்டு தாமதம் செய்கின்றனர்,’ என்று கூறினார்.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறு கையில், ‘‘பெரியாறு குடிநீர் திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட தாமதமாகிவிட்டது உண்மைதான். அதற்கு ‘கரோனா’ காலம் மட்டுமின்றி மழைக் காலமும் முக்கியக் காரணம். மேலும், மாநகர காவல்துறையினர் முக்கியச் சந்திப்புகளில் குழாய்களைப் பதிக்க அனுமதி வழங்காமல் இழுத்தடித்தனர். இதுபோன்ற காரணங்களாலே இந்தத் திட்டம் தாமதமானது,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x