Published : 10 Jan 2025 03:53 PM
Last Updated : 10 Jan 2025 03:53 PM
மதுரை: “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும்.” என்று மதுரையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மேலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தொல். திருமாவளவன் எம்பி இன்று (ஜன.10) சென்னையில் இருந்து மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டியிடம் விசிக சார்பில் நேரில் சந்தித்து திட்டத்தை கைவிடக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளோம். இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும்.
பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்ட புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்றுள்ளது. உயர் கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது. துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை என்பது போல கொண்டு வரப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக புதிய விதிகளை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும். அண்மைக் காலமாக பெரியார் மீது ஆதாரமின்றி அவதூறுகளை திட்டமிட்டு பரப்பப்படுகிறது. நீண்ட காலமாகவே சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற சதி வேலைகளை செய்கிறது. மொழி, இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் பெரியாரை குறிவைப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சீமான் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறியதாக உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது. அவர் பேசும் அரசியல் அவருக்கே எதிராக முடியும். தமிழ் , தமிழர்களுக்காக தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றுவேன். தமிழக மக்களின் சமூக நீதியும் தேசிய அடையாளமாக இருக்கும், தந்தை, பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இப்போக்கை சீமான் கைவிட வேண்டும். சீமான் பேச்சை அண்ணாமலை ஆதரிப்பார். அவர் சார்ந்த அமைப்புகளை ஆதரிக்கும் சீமான் புரிந்து நடக்க வேண்டும்,. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT