Last Updated : 10 Jan, 2025 01:09 PM

1  

Published : 10 Jan 2025 01:09 PM
Last Updated : 10 Jan 2025 01:09 PM

900-வது நாள்! - கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க கிளம்பிய பரந்தூர் போராட்டக் குழுவினர் கைது

கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க புறப்பட்ட பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களது 900-வது நாள் போராட்டமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மனு அளிக்க புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தங்களுடன் கொண்டு வந்திருந்த கருணாநிதியின் உருவப்படத்திடம் மனு அளித்தனர்.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து அப்பகுதி மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் 900-மாவது நாளை எட்டியுள்ளது. தங்களது 900-ம் நாள் போராட்டமாக ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடம் சென்று அவர் நினைவிடத்தில் மனு அளித்துவிட்டு அமைதியாக வருவது என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கூடினர். அங்கிருந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு பேருந்தில் புறப்பட்டனர்.

அப்பேருந்தை, சுங்குவார்சத்திரம் போலீஸார் கண்ணன்தாங்கல் என்ற கிராமத்தின் அருகே தடுத்து நிறுத்தினார். அப்போது போராட்டக் குழுவினர், “நாங்கள் அமைதியான முறையில் மனு அளிக்க செல்கிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். காவல்துறையினர் கூட்டமாக செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேரையாவது அனுமதியுங்கள் நாங்கள் அமைதியாக சென்று மனு அளிக்கிறோம் என்று கூறினர்.

ஆனால் அதற்கும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுமார் 50 பேரை கைது செய்த போலீஸார், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் ஆக்கிரமடைந்த போராட்ட குழுவினர் தாங்கள் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் கையுடன் கொண்டு வந்திருந்த கருணாநிதி உருவப்படத்திடம் மனு அளித்து முறையிட்டனர்.

இதுகுறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல் இளங்கோ கூறுகையில், “இங்கு திமுக ஆட்சி நடக்கிறது. அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அமைதியான முறையில் மனு அளிக்க கூட அனுமதி மறுக்கப்படுகிறது. 900-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த அரசு செவி சாய்க்காத நிலையில் ஏற்கெனவே ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க முடிவு செய்தோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை கூட இந்த அரசு காப்பாற்றவில்லை. விவசாயிகள் மீது அக்கறையற்ற அரசாக இந்த திமுக அரசு உள்ளது.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x