Published : 09 Jan 2025 12:47 AM
Last Updated : 09 Jan 2025 12:47 AM
ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் பதாகைகளுடன் வந்த விவகாரத்தில், முதல்வர் கேட்டுக் கொண்டதால் உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாபஸ் பெற்றார்.
பேரவையில் நேற்று அப்பாவு பேசும்போது, "ஆளுநரை பேசவிடாமல், அதிமுக உறுப்பினர்கள், அந்த சார் யார் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் காட்டி நெருக்கடி கொடுத்தனர். பின்னர் சில மணித் துளிகளில் ஆளுநர் வெளியேறிவிட்டார். பேரவை நடவடிக்கைகளை தொடர்வதற்காக அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினோம். பொதுவாக ஆளுநர் உரையின்போது எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பார்கள். ஆளுநர் அமைதியாக இருப்பார். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறுவார்கள். அல்லது வெளியேற்றப்படுவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை" என்றார்.
பேரவைத் தலைவரின் பேச்சுக்கு எதிராக, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், பேரவைக்கு ஆளுநர் வந்தபோது அரசின் கவனத்தை ஈர்த்தோம். இதுபோன்ற நடைமுறையை திமுகவும் பலமுறை செய்திருக்கிறது. ஆளுநரை பதாகைகளுடன் முற்றுகையிட்டதாகக் கூறுவதை வாபஸ் வாங்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்காரணம் கொண்டும் இக்கருத்தை வாபஸ் வாங்கக்கூடாது. ஆளுநர் வரும்போது உங்களைப் போல நாங்கள் பதாகைகளை எடுத்து வரவில்லை. இது பேரவை விதிமீறல் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் பேசும்போது குறுக்கிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஏற்கெனவே தனபால் பேரவைத் தலைவராக இருந்துள்ளார். அவரே சொல்லட்டும். பேரவைக்குள் பதாகைகளைக் கொண்டு வந்தது தவறு. பேரவைத் தலைவர் உடனே நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்.
பின்னர் பேசிய அப்பாவு, "பேரவை விதி மற்றும் மரபுகளை மீறி நடப்பதை ஏற்க முடியாது. அது தவிர்க்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் அவை உரிமை மீறிய செயலாக இருப்பதால் அதுகுறித்து விசாரிக்க பேரவை விதி 226-ன்கீழ் அவை உரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தொடர்ந்து கோஷமிட்டுக் கொண்டேயிருந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர், வரும் காலங்களில் இதுபோல நடந்து கொள்ளமாட்டோம் என உறுதி அளித்தால் தங்கள் நடவடிக்கையை வாபஸ் பெறலாம் என்றார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதாக அப்பாவு அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT