Last Updated : 08 Jan, 2025 08:46 PM

1  

Published : 08 Jan 2025 08:46 PM
Last Updated : 08 Jan 2025 08:46 PM

“அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரம்மாண்டமாக சென்னை உணவுத் திருவிழா” - உதயநிதி உறுதி

சென்னை: அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த டிச.20 முதல் டிச.24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழா வெற்றி பெற்றதையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, உணவுத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட 138 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து 180 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2,136 மகளிருக்கு ரூ.15.71 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகளையும் வழங்கினார். பின்னர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியது:

“சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 300 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்று, உணவுகளை விற்பனை செய்தனர். மக்களின் நீண்ட வரிசையில் நின்று உணவுகளை வாங்கி சென்று ருசித்தனர். அந்தளவுக்கு பொதுமக்களின் பாராட்டை பெற்ற சென்னை உணவுத் திருவிழா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திருவிழாவுக்கு மொத்தம் 3.5 லட்சம் பேர் வருகை தந்திருந்தனர். மொத்தம் ரூ.1.55 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

அந்த வகையில் மெரினாவில் வருகின்ற கடல் அலையை விட, உணவுத் திருவிழாவுக்கு வருகை தந்த மக்கள் தலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த வெற்றி சுய உதவிக் குழுவினரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மகளிர் தொழில்முனைவோரை அரசு உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை, மெரினாவில் பெரியதாக, அதிகமான அரங்குகளுடன் பிரம்மாண்டமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x