Published : 08 Jan 2025 02:11 PM
Last Updated : 08 Jan 2025 02:11 PM
சென்னை: “மத்திய அரசின் கட்டுப்பாடட்டில்தான் தொலைத்தொடர்பு துறை சர்வர் இருக்கிறது. செல்போன் அழைப்புகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மத்திய அரசின் சர்வரில் இருக்கிறது. அவர்கள் ஏன் ‘யார் அந்த சார்’ என்ற தகவலை வெளியிடவில்லை?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைக்கு வெளியே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நடவடிக்கை எடுத்து காவல் துறை ஞானசேகரனை கைது செய்துள்ளனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் ‘யார் அந்த சார்?’ என்று கேட்கின்றனர்.
மத்திய அரசின் கட்டுப்பாடட்டில்தான் தொலைத்தொடர்பு துறை சர்வர் இருக்கிறது. மிஸ்ட் கால், டயல் கால், ரீசிவ்டு கால் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மத்திய அரசின் சர்வரில் இருக்கிறது. அவர்கள் ஏன் இதை வெளியிடவில்லை? ஆனால், பேரவையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது தகவலை வெளியிடுமாறு கேட்கிறார். நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
மத்திய தொலை தொடர்புத் துறையில் இருந்து யார் அந்த சாரின் தொலைபேசி வெளியிடலாம். யார் அந்த சார் என்ற தகவலை வெளியிடலாம். ஏன் வெளியிடவில்லை. எதற்காக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலை.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு நேர்ந்த கொடுமையைவிட, எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் பேசும் அரசியல் மிக மிக கொடுமையாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். நேற்று அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்று சொல்ல முடியுமா என்பதுதான் எங்களுடைய கேள்வி. ஆனால், இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
10 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. அது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவரையும், ஆய்வாளர் ராஜி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் பேரியக்கம் எதையும் கொச்சைப்படுத்தி பேசுவதோ, அநாகரிகமாக பேசுவதோ கிடையாது. இந்த விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் கூறட்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT