Published : 08 Jan 2025 03:23 AM
Last Updated : 08 Jan 2025 03:23 AM
சென்னை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெரும் தொழில்களைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்துப், புதிய தொழிற்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.
அதேநேரத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிக அளவில் தொடங்க ஊக்கமளிப்பதன் வாயிலாக, சாதாரண மக்களும் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுப் பயனடைகின்றனர். அந்த வகையில், பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்துவரும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைவிட, தமிழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி, மாபெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-24-ம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழகத்தில் 39,699 சிறு, குறுந் தொழில்கள் உள்ளன. இவை 4,81,807 தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன. இதன் மூலம் தமிழகம் 8,42,720 மனித உழைப்பு நாட்களைக் கொண்டுள்ளது.
மகராஷ்டிராவில் 26,446 தொழிற்சாலைகளில், 6,45,222 தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். இம்மாநிலம் 7,29,123 மனித உழைப்பு நாட்களைக் கொண்டுள்ளது. குஜராத் 31,031 தொழிற்சாலைகளில், 5,28,200 தொழிலாளிகளிகளுடன், 7,21,586 மனித உழைப்பு நாட்களைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குதல், அதிகளவில் உற்பத்தியில் ஈடுபடுதல் ஆகியவற்றில் மனித உழைப்பு நாட்களில் குஜராத், மகாராஷ்டிராவைவிட தமிழகம் முன்னிலையில் உள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கரோனா காலத்தில் நேரிட்ட பல்வேறு இடர்பாடுகளால் தொழில்களும், வேலைவாய்ப்புகளும் குறைந்த நிலையை திமுக அரசு பொறுப்பேற்ற பின் சீர்ப்படுத்தி, முன்னேற்றத்தை அடைந்துள்ளது. திராவிட மாடல் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளதுடன், தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்து, சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT